முக்கிய சாட்சி ரேவதியிடம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நேரடியாக எழுப்பிய கேள்வி
ஜெயராஜ்-பென்னிக்சை கடுமையாக தாக்க உத்தரவிட்டது யார்? என்று பெண் போலீஸ் ரேவதியிடம் வழக்கு விசாரணையின்போது, இ்ன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நேரடியாக கேள்வி எழுப்பினார்.
ஜெயராஜ்-பென்னிக்சை கடுமையாக தாக்க உத்தரவிட்டது யார்? என்று பெண் போலீஸ் ரேவதியிடம் வழக்கு விசாரணையின்போது, இ்ன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நேரடியாக கேள்வி எழுப்பினார்.
சாத்தான்குளம் வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு போலீசார் கடுமையாக தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்து இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் முருகன், முத்துமுருகன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெண் போலீஸ் வாக்குமூலம்
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ரேவதி சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது சாட்சியம்தான் இந்த வழக்கின் பிரதானமாக கருதப்படுகிறது. இந்தநிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே ரேவதி ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை அவருக்கு காண்பிக்கப்பட்டன. அவை அனைத்தையும் அவர் பார்த்து உறுதிப்படுத்தினார்.
இந்தநிலையில் நேற்று மீண்டும் ரேவதி, மதுரை மாவட்ட கோர்ட்டில் நீதிபதி நாகலட்சுமி முன்பு ஆஜரானார். அப்போது, இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் சிறையில் இருந்து அழைத்து வந்து ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது ரேவதியிடம், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நேரடியாக குறுக்கு விசாரணை நடத்தினார். பின்னர் மற்ற கைதிகள் சார்பில் வக்கீல்கள் ரேவதியிடம் குறுக்கு விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டரின் தூண்டுதல்
ரேவதியிடம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கேட்ட கேள்விகள் தொடர்பாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-
ஸ்ரீதர்:- சம்பவத்தன்று ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தபோது நான் அங்கு இல்லைதானே?
ரேவதி:- நீங்கள் போலீஸ் நிலையத்தில் தான் இருந்தீர்கள்.
ஸ்ரீதர்:- நான் தந்தை-மகன் இருவரையும் தாக்குமாறு நான் போலீசாருக்கு எந்த உத்தரவும் போடவில்லை தானே?
ரேவதி:- நீங்கள் அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்குமாறு உத்தரவிட்டதன்பேரில்தான் மற்ற போலீசார் ஜெயராஜையும், பென்னிக்சையும் தாக்கினார்கள். உங்கள் தூண்டுதலின் பேரில்தான் உயிர் போகும்படியாக அவர்கள் தாக்கப்பட்டனர்.
இவ்வாறு ஸ்ரீதரின் கேள்விகளுக்கு ரேவதி பதில் அளித்துள்ளார்.
அழுத்தமான பதில்
திரும்பத்திரும்ப ஸ்ரீதர் அது சம்பந்தமான கேள்விகளை கேட்டும், ஒரே பதிலைத்தான் ரேவதி அழுத்தமாக கூறினார் எனவும் தகவல்கள் கூறப்படுகின்றன.