அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி அறிவுறுத்தி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்செல்வி முன்னிலை வகித்தார்.

தேர்ச்சி

கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பேசும் போது, பள்ளிக்கூடங்கள் வருகிற 13-ந் தேதி திறக்கப்பட உள்ளன. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். இதற்கு தலைமை ஆசிரியர்கள் தேவையான முயற்சி எடுக்க வேண்டும். தினமும் காலையில் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நடத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் தனித்திறமைகளை வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி வகுப்பறையில் மேஜை, பெஞ்சுகள் சுத்தமாக இருக்க வேண்டும். பள்ளி வளாகத்தையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிப்பறை வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 300 பள்ளிக்கூடங்களை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story