விழுப்புரம் சாலாமேட்டில் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு பாடத்திட்டத்தோடு உடற்கல்வியையும் பயிற்றுவிக்க அறிவுறுத்தல்


விழுப்புரம் சாலாமேட்டில் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு பாடத்திட்டத்தோடு உடற்கல்வியையும் பயிற்றுவிக்க அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாடத்திட்டத்தோடு உடற்கல்வியையும் பயிற்றுவிக்குமாறு அறிவுறுத்தினார்.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலாமேட்டில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டு பதிவிற்கான சான்றுகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டார்.

மேலும் தங்கும் அறை வசதி, வகுப்பறைகளில் மாணவர்களுக்கான இருக்கை வசதி, மின் விளக்கு, மின்விசிறி வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் மற்றும் கண்காணிப்பு கேமரா தொடர் பயன்பாட்டில் உள்ளதா என்றும், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாட்டிற்கான நூலகம், கணினி ஆய்வகத்தையும் பார்வையிட்டார்.

அறிவுறுத்தல்

அதனை தொடர்ந்து குழந்தைகளின் வகுப்பறைக்கு நேரடியாக சென்று குழந்தைகளின் கற்றல் திறன், வாசிப்புத்திறன் குறித்து கலெக்டர் பழனி கேட்டறிந்தார். அப்போது குழந்தைகளால் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் மாணவர்களின் இசை பயிற்சிக்கான கருவிகளை பார்வையிட்டார். மேலும் இல்லத்தில் குழந்தைகளின் உடல்நலனை பாதுகாத்திடும் வகையில் கல்வியோடு, உடல்திறனை மேம்படுத்தும் உடற்கல்வியையும் பயிற்றுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இல்லத்தை நாள்தோறும் தூய்மையாக பராமரிப்பதோடு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் பழனி அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story