இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்


இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
x

பயிர் காப்பீடு தொகை வழங்காத இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர்

பயிர் காப்பீடு தொகை வழங்காத இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர்கள் இளையராஜா ஸ்ரீதரன், ராஜேந்திரன், கோவிந்தராஜ். விவசாயிகளான இவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு பிரீமிய தொகையினை பிரதான் மந்திரி பசல் பீம யோஜனா என்கிற திட்டத்தின் கீழ் அலிஜியான் இன்சூரன்ஸ் புரோக்கிங் கம்பெனி மூலம் டெல்லியில் உள்ள அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனியில் செலுத்தியுள்ளனர்.

பயிர்காப்பீடு தொகை

இளையராஜா 10 ஏக்கருக்கு ரூ.4,229-ம், ஸ்ரீதரன் 20 ஏக்கருக்கு ரூ.7,810-ம், ராஜேந்திரன் 19 ஏக்கருக்கு ரூ.7.293-ம், கோவிந்தராஜு 13 ஏக்கருக்கு ரூ.4,229-ம் பிரீமிய தொகை செலுத்தினர்.

இந்த 4 விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு தொகை கிடைக்காமல் இருந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சென்னையில் உள்ள காப்பீட்டு நிறுவனத்தில் கேட்டபோது விரைவில் கிடைத்து விடும் என்று உறுதி அளித்துள்ளனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் பயிர்காப்பீட்டு தொகை கிடைக்காததால் மீண்டும் அந்த நிறுவனத்தை கடிதம் மூலமும், நேரிலும் அணுகி உள்ளனர். அதற்கு அந்த நிறுவனம் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு

இதனைத்தொடர்ந்து 4 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 10-ந் தேதி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, லட்சுமணன் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.

அதில், இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரீமியம் செலுத்தியும் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்சூரன்ஸ் நிறுவனம் தங்களது கடமையை சரிவர செய்யாமல் சேவை குறைபாடு செய்து விவசாயிகளுக்கு மன உளைச்சலையும், பொருள் நஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ரூ.13 லட்சம் இழப்பீடு

எனவே இளையராஜாவிற்கு பயிர்காப்பீட்டு தொகையான ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் மற்றும் அவருக்கு ஏற்படுத்திய மன உளைச்சல், பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக ரூ.2 லட்சமும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும்.

ஸ்ரீதரனுக்கு பயிர்காப்பீட்டு தொகையாக ரூ.4 லட்சத்து 16 ஆயிரமும், இழப்பீடாக ரூ.4 லட்சமும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும், ராஜேந்திரனுக்கு பயிர்காப்பீட்டு தொகையாக ரூ.4 லட்சத்து 66 ஆயிரத்து 500-ம், இழப்பீடாக ரூ.4 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரமும், கோவிந்தராஜ் நிலத்திற்காக பயிர்காப்பீட்டு தொகையாக ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 50-ம், இழப்பீடாக ரூ.3 லட்சமும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும் என 4 பேருக்கும் மொத்தம் ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

கண்காணிக்க அறிவுரை

மேலும் பயிர்காப்பீட்டு தொகையாக ரூ.14 லட்சத்து 66 ஆயிரத்து 550, வழக்கு செலவுத்தொகையாக ரூ.40 ஆயிரத்ைத வழங்க வேண்டும். இதை டெல்லியை சேர்ந்த காப்பீட்டு நிறுவன மேலாண்மை இயக்குனரும், சென்னை மண்டல மேலாளரும், அல்ஜியான் இன்சூரன்ஸ் புரோக்கிங் கம்பெனியின் மேலாண்மை இயக்குனரும் சேர்ந்தோ அல்லது தனித்தோ தீர்ப்பளித்த நாளில் இருந்து 6 வாரத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் 9 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இந்த தீர்ப்பில் மத்திய அரசின் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி டெவலப்மெண்ட் அத்தாரிட்டி நிறுவனம் இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காமலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறதா? என்பதனையும் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.


Next Story