மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்
x

பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை ஆகியவற்றின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஜெய்சங்கர், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அரசு மருத்துவமனை மருத்துவர்களான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்கள், அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்களுக்காக பரிந்துரை செய்தனா். முகாமில் பிறப்பு முதல் 18 வயதுடைய 55 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும், 74 மாற்றுத்திறன் கொண்ட பெரியவர்களும் கலந்து கொண்டனர். இதில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன. 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மறு மதிப்பீடு செய்யப்பட்டது. சி.பி. நாற்காலி ஒரு நபருக்கும், சக்கர நாற்காலி 3 நபர்களுக்கும், நடைபயிற்சி வண்டி ஒரு நபருக்கும் வழங்க தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக வட்டார வள மைய மேற்பார்வையாளர் வஹிதா பானு வரவேற்றார். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.

இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் இன்று (வியாழக்கிழமை) டி.களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், நாளை (வெள்ளிக்கிழமை) தெரணி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வருகிற 12-ந்தேதி கொளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 14-ந்தேதி சிறுகன்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் நடைபெறவுள்ளது.


Next Story