"சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை தடுக்க உளவுப்படை தேவை":திருமாவளவன்
“சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை தடுக்க உளவுப்படை தேவைப்படுகிறது” என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
"சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை தடுக்க உளவுப்படை தேவைப்படுகிறது" என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
பேட்டி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் கண்டித்து உள்ளார். இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரும்புக்கரம் கொண்டு நசுக்குவோம் என உறுதியளித்து உள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். அந்த விசாரணையில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
உளவுப்பிரிவு
இதுபோன்ற செயல்களை தடுப்பதற்கு தனி உளவுப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை தடுக்க எவ்வாறு கியூ பிரிவு இருக்கிறதோ அதுபோல சாதி, மதத்தின் பெயரால் வன்முறைகள் நடைபெறுவதை தடுப்பதற்கும், முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒரு உளவுப்படை தேவைப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். இரட்டை குவளை முறை தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ளது. அதனை கண்டறிவதற்கு சிறப்பு விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
மத்திய மந்திரி ஒருவர் தான் அங்கு இருப்பது ராமர் பாலம் இல்லை என்று பேசியதை ஊடகங்களில் பார்த்தோம். மீண்டும் அவர்கள் அதை ராமர் பாலம் என்று சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கருதக்கூடியவர்கள் மீண்டும் ராமர் பாலம் பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள். இந்த திட்டம் தொடர்பாக மீனவர்கள், மக்களின் கருத்துகளை கேட்டறிந்து, அதன் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தி.மு.க. கூட்டணி வெற்றி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. அங்கு மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிட தி.மு.க. இடமளித்து உள்ளது. அந்த தொகுதியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கு கூட்டணி கட்சிகள் தீவிரமாக பணியாற்றுவோம். அ.தி.மு.க. தற்போது சின்னத்தையே இழந்து நிற்கிறது. ஒரே அ.தி.மு.க.வாகவும் இல்லை.
தாட்கோ மூலம் மானியம் வழங்க முன்வந்தாலும் வங்கிகள் கடன் வழங்க தயாராக இல்லை. வங்கிகளும் ஒத்துழைத்தால் தான் தாட்கோ கடனுதவியை ஆதிதிராவிட மக்கள் பெற்று பயன்பெற முடியும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையிலான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் அரசு விரைவாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.