குமரி மாவட்டத்தில் உளவுத்துறை போலீசார் விசாரணை
ஓடும் ெரயிலில் பயணிகள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து குமரி மாவட்டத்தில் உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
நாகர்கோவில்:
ஓடும் ெரயிலில் பயணிகள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து குமரி மாவட்டத்தில் உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
ரெயில் நிலையங்களில் சோதனை
கேரளா மாநிலம் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. ரெயில் கோழிக்கோடு ரெயில் நிலையத்தை கடந்த சென்றது. அப்போது,
ரெயில் பெட்டியில் இருந்த மர்மநபர் ஒருவர், சக பயணி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் 3 பேர் உடல்கருகில் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர். இதுபற்றி கேரள போலீசார் விசாரணை நடத்தி வைக்கின்றனர்.
ஓடும் ரெயிலில் நடந்த இந்த அசம்பாவித சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் பயணிகளின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
நாகர்கோவிலில்...
அதன்படி நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் முழுவதும் நேற்று மாலை ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் ரெயில் நிலையத்திற்கு வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களில் உள்ள பயணிகளின் உடைமைகளையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது பயணிகள் வைத்திருந்த தண்ணீர் பாட்டில்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். நிலையத்தில் இருந்த பயணிகளிடமும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
உளவுத்துறை விசாரணை
இதேபோல் இரணியல், குழித்துறை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதற்கிடையே கேரளாவில் ரெயிலில் பயணிகள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குமரி மாவட்ட உளவுத்துறை போலீசார் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் ரகசிய விசாரணை நடத்தினர். அவர்களுடன் கேரள போலீசாரும் உடன் இருந்தனர்.