பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம்
திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பருத்தி சாகுபடி
நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான திருமருகல் ஒன்றியத்தில் ஒவ்வொரு ஆண்டும் முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக பாசனத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததால் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டன.இந்தநிலையில் குறைந்த அளவு தண்ணீரில் வளர கூடிய பருத்தி சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டனர். இதனையடுத்து ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து திருமருகல் ஒன்றியத்தில் 5 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மகசூல்
திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், பண்டாரவாடை, தென்பிடாகை, கீழகரையிருப்பு, மேலகரையிருப்பு, மருங்கூர், சீயாத்தமங்கை, திருச் செங்காட்டங்குடி, மேலப்பூதனூர், போலகம், குருவாடி, திருப்புகலூர், திருக்கண்ணபுரம், ஆலத்தூர், இடையாத்தங்குடி, சேஷமூலை, கிடாமங்கலம், கணபதிபுரம், பொரக்குடி, அம்பல், கொங்கராயநல்லூர், ஏர்வாடி, கோட்டப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஒரு சில இடங்களில் பருத்தி செடிகள் நன்கு வளர்ந்து பூக்கும் நிலையில் உள்ளது. நெல் சாகுபடி மற்றும் உளுந்து, பயறு சாகுபடியில் போதிய மகசூல் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பருத்தி சாகுபடியிலாவது அதிக மகசூல் கிடைக்குமா? என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.