காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிக்காக குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம்
ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிக்காக குழாய்கள் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகள், 7 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.1,368 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே மாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குடிநீர் திட்டப்பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்துவரப்பட்டு, கோவிலூர், எரியோடு, வேடசந்தூர், ஒட்டநாகம்பட்டி, காளாஞ்சிபட்டி வழியாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஜகதாபி, பாளையம் ஆகிய பகுதிகளில் குடிநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிக்காக குழாய்கள் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக ஜகதாபி, பாளையம் ஆகிய குடிநீர் உந்து நிலையங்களில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் சாலையிலும், கள்ளிமந்தையத்தில் இருந்து தொப்பம்பட்டி வரையிலும் சாலையோரங்களில் குழாய்கள் பதிக்கும் பணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக லாரிகள் மூலம் குழாய்கள் கொண்டுவரப்பட்டு, நேற்று ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம்பையில் சாலையோரம் பொக்லைன் எந்திரம் மூலம் இறக்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.