ரேஷன் கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி தீவிரம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கவதற்கான கரும்புகளை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம், முழு கரும்பு ஒன்று, ஒருகிலோ சக்கரை, ஒரு கிலோ பச்சரி அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (திங்கட்கிழமை) முதல் வினியோகம் செய்யப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 744 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், கூட்டுறவுத்துறையும் செய்து வருகிறது.
கரும்புகள் அனுப்பும் பணி
இதற்கிடையே திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள கரும்புகளை அந்தந்த ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதனை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் சி.பெ.முருகேசன் கரும்பு கொள்முதல் செய்யப்படும் இடங்களுக்கே நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கரும்பு தரமாகவும், 6 அடி உயரத்திற்கு மேல் இருக்கும் கரும்புகளை மட்டுமே ரேஷன்கடைகளுக்கு அனுப்பவும், பொங்கல் தொகுப்பில் உள்ள பச்சரிசி தரமாக இருக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது கூட்டுறவு சார்பதிவாளர்கள் சதாசிவம், சென்னம்மாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.