ரேலியா அணையை பராமரிக்கும் பணி தீவிரம்
குன்னூர் அருகே உள்ள ரேலியா அணையை பராமரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குன்னூர்
குன்னூர் அருகே உள்ள ரேலியா அணையை பராமரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரேலியா அணை
குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக ரேலியா அணை விளங்கி வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணை குன்னூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பந்துமி என்ற இடத்தில் அமைந்துள்ளது. அப்போதைய குன்னூர் நகராட்சி மக்கள் தொகைக்கேற்ப அணையின் கொள்ளளவு 43.7 அடியாக கட்டப்பட்டது.
ரேலியா அணையின் முக்கிய நீராதாரமாக மைனலை நீரூற்று உள்ளது. இது மட்டுமின்றி பருவமழையின் போது உருவாகும் நீருற்றுகளால் அணை நிரம்புகிறது. பருவமழை காலத்தில் அணை நிரம்பி உபரிநீர் அணையில் இருந்து வெளியேறி வீணாக செல்லும் நிலை உள்ளது.
பராமரிப்பு பணி
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரேலியா அணையின் பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணி நடந்தது. இதனால் தற்போது ரேலியா அணையில் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டு, தீவிரமாக நடைபெற்று வருகிறது. அணையின் சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், அணையை ஓட்டியுள்ள காலி நிலத்தில் வளர்ந்துள்ள புதர்செடிகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரேலியா அணையின் நீர்மட்டம் தற்போது 41 அடியாக உள்ளது. குன்னூர் நகர மக்களின் தேவைக்கு பார்சன் வேலி தண்ணீரையும் மற்ற நீராதாரங்களில் உள்ள தண்ணீரையும் வழங்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் குன்னூர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வேண்டி ரேலியா அணையிலுள்ள தண்ணீரை இருப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.