மானூர் பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரம்
மானூர் பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் பழனியை அடுத்த மானூர், வில்வாதம்பட்டி, கோதைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது நெற்பயிர்கள் விளைச்சல் அடைந்ததால் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் நெல் டிராக்டரில் ஏற்றி களத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அவை மூட்டைகளில் கட்டி திண்டுக்கல், மதுரை மற்றும் கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் வைக்கோலும் கட்டாக கட்டி விற்பனைக்காக லாரியில் கொண்டு செல்லப்படுகிறது.
அறுவடை பணிகள் குறித்து விவசாயிகள் கூறுகையில், மானூர் பகுதியில் திருச்சி-1 என்ற ரகம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 150 கிலோ எடை கொண்ட நெல் மூட்டை சுமார் ரூ.2 ஆயிரத்து 700 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. வைக்கோல் கட்டு ரூ.140 வரை விலை போகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் நெல் விளைச்சல் நன்றாக உள்ளது. ஆனால் அதற்கான போதிய விலை தான் கிடைக்கவில்லை. நெல் சாகுபடிக்கு உழவு, நடவு, களை பறிப்பு, உரம், அறுவடை என அனைத்துக்குமான செலவு மொத்த வருவாயில் பாதிக்கு மேல் போய்விடுகிறது. இதனால் நெல்லுக்கான விலையும் குறைவாக உள்ளதால் பெரிதாக லாபம் ஏதும் இல்லை என்றனர்.