வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்


வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
x

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளதால், வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கையிலும் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

திண்டுக்கல்

கோடை விடுமுறை

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,979 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் தற்போது வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை பின்பற்றி அமரும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமின்றி பள்ளி வளாகம் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடக்கிறது. மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு வழங்க பயன்படுத்தப்படும் சமையல் உபகரணங்கள் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் கைகளை சுத்தப்படுத்திக்கொள்வதற்காக ஒவ்வொரு வகுப்பறைகளிலும் கிருமிநாசினி வைக்கப்படுகிறது. இதுதவிர ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், கழிப்பறைகள் ஆகியவற்றையும் தூய்மைப்படுத்தும் பணியில் அந்தந்த பள்ளி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவாத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல்லில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பள்ளிக்கு செல்லாமல் உள்ள மாணவர்களை கணக்கெடுத்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புத்தகங்கள் அனுப்பும் பணி

இதேபோல் பள்ளிகள் திறக்கப்பட்டதும் முதல் நாளில் இருந்தே மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் போன்ற கல்வி உபகரணங்களை வழங்க பள்ளி நிர்வாகிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் தேவையான பாடப்புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் ஆகியவையும் மாவட்டம் வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

மாவட்டம் முழுவதும் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 2¾ லட்சம் பாடப்புத்தகங்கள் திண்டுக்கல்லுக்கு வந்தன. இவை அனைத்தும் திண்டுக்கல் முருகபவனத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் குடோனில் இருப்பு வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக பள்ளிகள் வாரியாக பாடப்புத்தகங்கள் பிரிக்கப்பட்டு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் திண்டுக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுவிடும். நாளை பள்ளிகள் திறந்ததும் அந்த புத்தகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story