குளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்


குளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்
x

பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள குளங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள தாமரைக்குளம், கருங்குளம், சொட்டாங்குளம் ஆகியவற்றின் மதகுகள் கட்டப்பட்டு, 50 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இதனால் மதகுகள் சேதம் அடைந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது. இதனை தடுக்கும் வகையில், மண்மூட்டைகளை அடுக்கி மதகுகளை விவசாயிகள் அடைத்தனர். மேலும் சேதம் அடைந்த மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைக்கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகளின் புனரமைத்தல், சீரமைத்தல், நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் தாமரைக்குளத்தில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் தூர்வாரப்படுகிறது. புதிதாக 4 மடைகளை கட்டி, 2 கிலோமீட்டர் தூரத்துக்கு கரையை பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதேபோல் ரூ.58 லட்சம் மதிப்பில் கருங்குளத்தில் சீரமைப்பு பணி முழு வீச்சாக நடைபெறுகிறது.

இந்த பணிகளை மத்திய நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவராஜன், மத்திய நீர்வளத்துறை இயக்குனர் தங்கமணி, இணை இயக்குனர் பன்னீர்செல்வம், பெரியார்-வைகை நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சுகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மஞ்சளாறு வடி நிலகோட்ட செயற்பொறியாளர் சுகுமாறன், மருதாநதி அணை வடிநில உப கோட்ட உதவி செயற்பொறியாளர் செல்வம், மருதாநதி அணை உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story