6 ஆயிரத்து 270 மையங்களுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 270 மையங்களுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 6 ஆயிரத்து 270 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு கற்பிக்க வசதியாக கற்றல் அட்டைகள், பாடக்குறிப்பு புத்தகங்கள் மற்றும் கதைப்புத்தகங்கள் வந்துள்ளன.
இவை அனைத்தும் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கிடையே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இல்லம் தேடி கல்வி மையங்களும் முழுவீச்சில் இயங்க உள்ளன. எனவே இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களுக்கு புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.
இதில் 1 முதல் 5-ம் வகுப்பு மற்றும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தனித்தனியாக கற்றல் அட்டைகள், பாடக்குறிப்பு புத்தகங்கள், தன்னார்வலர்களுக்கு வழிகாட்டி ஆகியவை அனுப்பி வைக்கப்படுகின்றன. இதேபோல் மாணவர்களிடம் வாசிப்பு திறனை அதிகரிக்க ஒவ்வொரு மையத்திலும் நூலகங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு மையத்துக்கும் தலா 20 தலைப்புகளில் புத்தகங்களும் வழங்கப்படுகிறது.