நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தீவிரம்
ஜோலார்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள், மரங்கள் ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர்.
ஜோலார்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள், மரங்கள் ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர்.
சாலை விரிவாக்க பணி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து ஊத்தங்கரை வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணி கடந்த 2020-ம் ஆண்டு சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாணியம்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை அருகே உள்ள மேட்டுசக்கரகுப்பம் வரை 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது.
ஜோலார்பேட்டையை அடுத்த பக்கிரிதக்கா பகுதியிலிருந்து திருப்பத்தூர் வரை பணி நடைபெற்று வருகிறது. தற்போது திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்க வருகிற 30-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர இருப்பதாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
இதனால் தேசிய நெடுஞ்சாலை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜோலார்பேட்டையில் உள்ள சந்தைக்கோடியூர் பகுதியிலிருந்து பக்கிரிதக்கா வரை நான்கு வழி சாலை அமைப்பதற்கான விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரங்களில் உள்ள மரங்கள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று சந்தைக்கோடியூர் பகுதியில் சாலையோரம் இருந்த புளிய மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மின் கம்பி மீது மரம் சாய்ந்து விழுந்ததால் மின்கம்பம் உடைந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. முன்னதாக மின்சாரம்து துண்டிக்கப்பட்டு இருந்ததால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.