ஊட்டியில் தீவிர வாகன சோதனை
75-வது சுதந்திர தின விழாவையொட்டி ஊட்டியில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி,
75-வது சுதந்திர தின விழாவையொட்டி ஊட்டியில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
விழா மேடை
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா இன்று காலை 10 மணிக்கு ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. நீலகிரி கலெக்டர் அம்ரித் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.
பின்னர் சிறப்பு பணிபுரிந்த அரசு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் பல்வேறு துறை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. விழாவையொட்டி மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டு, கொடி கம்பம் நடப்பட்டு இருக்கிறது. முக்கிய பிரமுகர்கள், பார்வையாளர்கள் அமரும் வகையில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. விழா நடைபெறும் மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.
வாகன சோதனை
சுதந்திர தின விழாவையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி நகரம், ஊட்டி ஊரகம், குன்னூர், கூடலூர், தேவாலா ஆகிய 5 உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மாவட்ட எல்லையான கக்கனல்லா, நாடுகாணி, எருமாடு, பாட்டவயல், முள்ளி, பர்லியார் சோதனைச்வாடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனைக்கு பின்னரே, வாகனங்களை நீலகிரிக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் ஊட்டியில் லவ்டேல் சந்திப்பு, தொட்டபெட்டா, தலைகுந்தா, சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். தங்கும் விடுதிகள், காட்டேஜ்களில் சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா என சோதனை நடத்தப்பட்டது.