விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன்- அதிகாரி தகவல்


விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன்- அதிகாரி தகவல்
x

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்படுகிறது என்று மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 152 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறுதொழில் கடன், குறைந்த வட்டியில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கடன், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடன், விவசாயம் சார்ந்த மத்திய காலக்கடன், விவசாயம் சாராத மத்திய காலக்கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் விளைபொருட்களை சேகரித்து வைப்பதற்காக 91 கிடங்குகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கூட்டுறவு சங்க கிடங்குகளில் சேமித்து வைக்கவும், விலை உயரும்போது விற்பனை செய்ய ஏதுவாகவும், விவசாய விளைபொருட்களை சேமித்து வைத்து அதன் மீது தானிய ஈட்டுக்கடன்களும் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்களது குடும்ப தேவைகளுக்காக கூட்டுறவு நிறுவனங்களில் நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம். கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர ஆதார் நகல், மின்னணு குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரூ.110 ஆகியவற்றுடன் பயிர் கடன் பெறுவோர் கணினி சிட்டா, அடங்கல் ஆகியவற்றுடன் சங்கங்களை அணுகி பயன்பெறலாம். அனைத்து வகையான உரங்களும் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

பொது சேவை மையங்கள்

கூட்டுறவுத்துறையின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 137 பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் சிட்டா, பட்டா, சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றை குறைந்த கட்டணத்தில் உடனடியாக பெற்று வழங்கப்படுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் சேவைகள் குறித்து தங்களுக்கு தேவையான விவரங்களை விழுப்புரம், விக்கிரவாண்டி, காணை, கண்டமங்கலம், வானூர் ஆகிய வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விழுப்புரம் சரக துணைப்பதிவாளரை 73387 49702 என்ற எண்ணிலும், திண்டிவனம், மரக்காணம், மேல்மலையனூர், மயிலம், செஞ்சி, வல்லம் ஆகிய வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் திண்டிவனம் சரக துணைப்பதிவாளரை 73387 49703 என்ற எண்ணிலும், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம் ஆகிய வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் திருக்கோவிலூர் சரக துணைப்பதிவாளரை 73387 49704 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை மண்டல இணைப்பதிவாளர் (பொறுப்பு) பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


Next Story