வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்
நலிவுற்ற தொடக்க கூட்டுறவு வங்கிகளுக்குவட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க 6-வது மாநில மாநாடு தர்மபுரி வெண்ணாம்பட்டி போலீஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் வைரப்பன் தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் சரவணன் வரவேற்றார். தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர் சுப்ரமணியன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, பொது செயலாளர் ஜினசந்திரன், வரவேற்புக்குழு செயலாளர் முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன செயலாளர் சீனிவாசன் தீர்மானங்கள் குறித்து பேசினார்.
தமிழ்நாடு கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்களுக்கு கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 180 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி கிளைகளை, தமிழ்நாடு கூட்டுறவு வேளாண்மை வங்கி கிளைகளாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நலிவுற்ற தொடக்க வங்கிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் வங்கி மற்றும் கூட்டுறவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.