வன்னியருக்கான உள் இடஒதுக்கீட்டை விரைந்து தராவிட்டால் போராட்டம்
வன்னியருக்கான உள் இடஒதுக்கீட்டை விரைந்து தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று வாழப்பாடியில் நடந்த பா.ம.க. கொடியேற்று விழாவில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
வாழப்பாடி
வன்னியருக்கான உள் இடஒதுக்கீட்டை விரைந்து தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று வாழப்பாடியில் நடந்த பா.ம.க. கொடியேற்று விழாவில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
கொடியேற்று விழா
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பா.ம.க. கொடியேற்று விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் விஜயராஜா தலைமை தாங்கினார். விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பா.ம.க. அறிவித்த திட்டங்களை தான் செயல்படுத்தி வருகின்றன. ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை வேண்டும் என்று முதன் முதலில் கூறியது பா.ம.க.தான். அதனை சட்டமாக்கி அரசு அனுப்பியும் கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க செய்தது பா.ம.க.தான்.
நீங்கள் எதிர்பார்த்த வளர்ச்சியை இன்னமும் திராவிட கட்சிகளால் தர முடியவில்லை. எனக்கு ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள். உங்களுக்கான வளர்ச்சியை நான் தருகிறேன். டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கங்களை பா.ம.க. ஒருபோதும் அனுமதிக்காது. தமிழ்நாட்டில் எந்த இடத்தில் நிலக்கரி எடுத்தாலும் அதனை தமிழ்நாடு அரசு எதிர்க்க வேண்டும். அதற்கு அனுமதி அளிக்கவும் கூடாது.
இட ஒதுக்கீடு
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை இன்னும் ஒரு மாதத்தில் சட்டமாக கொண்டு வாருங்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை. நியாயமான காரணங்களை மட்டுமே அவர்கள் கேட்கிறார்கள். அதற்கு உண்டான தரவுகளை எடுப்பதற்கு 6 மணி நேரம்தான் ஆகும். அதனை எடுத்து கொடுக்க அவர்களுக்கு மனமில்லை.
இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை தாருங்கள். இல்லை என்றால் என்னுடைய தம்பிகளை கட்டுப்படுத்த முடியாது. இது சாதி பிரச்சினை அல்ல. சமூக பிரச்சினை. விரைந்து 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தராவிட்டால் இந்தியா இதுவரை பார்த்திராத போராட்டத்தை தமிழ்நாடு சந்திக்கும். அதனை தவிர்க்க வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை தாருங்கள்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.