கரூரில் சர்வதேச முருங்கை கண்காட்சி
கரூரில் நடந்த சர்வதேச முருங்கை கண்காட்சியில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தனர்.
கண்காட்சி
கரூரில் நேற்று சர்வதேச முருங்கை கண்காட்சி தொடங்கியது. இக்கண்காட்சியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், துணைவேந்தர்கள் ஆறுமுகம் (திருவள்ளுவர் பல்கலைக்கழகம்), கீதாலட்சுமி, மத்திய அரசின் அபிடா மண்டலத்தலைவர் ஷோபனாகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
50,000 ஏக்கர் முருங்கை விவசாயம்
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:- அரசு முருங்கை மண்டலமாக கரூர் மாவட்டத்தை அறிவித்துள்ளது. இந்த முருங்கை மண்டலமாக கரூர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் முருங்கையை உற்பத்தி உள்ளது. எனவே முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஏற்றுமதி ஆலோசகர் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி அமைக்க திட்டம் மதிப்பீடு செய்யப்படவுள்ளது. இதை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும். தமிழ்நாட்டில் மட்டும் முருங்கை சாகுபடி 53 ஆயிரத்து 500 ஏக்கர் அளவிற்கு இங்கு விவசாயம் உள்ளது. உலகிற்கே மதிப்பு கூட்டப்பட்ட முருங்கை உணவுப்பொருட்களை வழங்கும் இடமாக கரூர் மாவட்டம் அமைவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள், என்றார்.
தொழில் துறையில் முதன்மை மாநிலம்
அமைச்சர் த.மோ.அன்பரசன் பேசியதாவது:- வேளாண்மை துறையில் சிறந்து விளங்கும் தமிழகம் இன்றைக்கு அதற்கு இணையாக தொழில் துறையிலும் முன்னேறி உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த சத்துள்ள உணவான முருங்கையை நாம் வணிக பொருளாக பயன்படுத்துவது இல்லை. சமீபகாலமாக அந்த முருங்கை மரங்கள் வணிக ரீதியாக தமிழகத்தின் கரூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வாறு சாகுபடி செய்யப்படும் முருங்கை உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் 10 ஏக்கர் நிலத்தில் முருங்கை பார்க் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். புதிய வேளாண் தொழில் துறையை வளர்த்தெடுத்து, தமிழகத்தை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும், என்றார்.
முருங்கை பூங்கா
அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:- கரூரில் விரைவில் முதல்முறையாக முருங்கை பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஒரே ஆண்டில் ஒரு லட்சம் மின் இணைப்பு இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கான மின் இணைப்பு எல்லாவற்றிற்கும் மேலாக கரூர் மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம் விரைவில் வர உள்ளது. ஒன்றை ஆண்டுகளில் 3 ஆயிரம் கோடி நிதிகளை கொடுத்து அந்த திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இந்தத் திட்டங்கள் மட்டுமல்லாது இன்னும் வரக்கூடிய ஆண்டுகளில் இன்னும் ஏராளமான திட்டங்களை முதல்-அமைச்சர் வழங்க இருக்கிறார். இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் கரூர் மாவட்டம் எல்லா நிலையிலும் நல்லா வசதிகளை அடைந்த மாவட்டமாக திகழவுள்ளது, என்றார். இதில் இந்திய கூட்டமைப்பு தலைவர் வெங்கடேஷ், தமிழ்நாடு இந்திய கூட்டமைப்பு துணைத்தலைவர் சங்கர் வானவராயர், கரூர் மாவட்ட துணைத்தலைவர் செந்தில்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திடீர் ஆய்வு
பின்னர் கரூர் வேளாண்மை கல்லூரியில் 3 அமைச்சர்களும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது மாணவ, மாணவிகளிடம் கல்வி முறைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் துணைவேந்தரிடம் நடப்பாண்டு மற்றும் எதிர் ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர்கள் கேட்டிருந்தனர்.