66 அரங்குகளுடன் சர்வதேச பின்னலாடை கண்காட்சி


66 அரங்குகளுடன் சர்வதேச பின்னலாடை கண்காட்சி
x

66 அரங்குகளுடன் சர்வதேச பின்னலாடை கண்காட்சி

திருப்பூர்

திருப்பூர்,

திருப்பூர் அருகே 66 அரங்குகளுடன் சர்வதேச பின்னலாடை கண்காட்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். நாளையுடன் (வெள்ளிக்கிழமை) கண்காட்சி நிறைவு பெறுகிறது.

சர்வதேச பின்னலாடை கண்காட்சி

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) சார்பில் சர்வதேச அளவிலான 48-வது பின்னலாடை கண்காட்சி திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 66 பின்னலாடை உற்பத்தியாளர்கள் அரங்குகளை அமைத்துள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, கனடா, ரஷியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான வர்த்தக ஏஜென்சிகள் கண்காட்சியை பார்வையிட்டு வருகிறார்கள். இந்த முறை கண்காட்சியில் டெல்லி பையிங் அசோசியேசன், திருப்பூர் பையிங் அசோசியசேன் இணைந்துள்ளதால் அதிகப்படியான பையர்கள், பையிங் ஏஜென்சிகள் வருகை தந்துள்ளனர்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

இந்த கண்காட்சியின் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்தியா நிட் பேர் சங்கத்தின் தலைவரும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பையிங் ஏஜெண்ட் சங்க தலைவர் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அரங்குகளை அமைச்சர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஆடைகளின் விவரங்களை கேட்டறிந்தனர். வெளிமாநிலங்களில் இருந்து உற்பத்தியாளர்கள் அரங்கு அமைத்திருந்தனர். அதுபோல் வெளிநாடுகளில் முக்கிய பிராண்டட் நிறுவனங்களின் பையர்களும் வந்து அரங்குகளை பார்வையிட்டனர்.

நாளை வரை நடக்கிறது

கொரோனா காலத்துக்கு பிறகு இந்த கண்காட்சி நடப்பதால் அதிகப்படியான பையர்கள் வருகை தர உள்ளதாக தெரிவித்தனர். திருப்பூரில் உற்பத்தியாகும் நவீன ஆடைகள், குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கான ஆடைகள், விளையாட்டு ஆடைகள், உள்ளாடைகள் உள்ளிட்ட ஆடைகள் அரங்குகளில் இடம்பெற்று இருந்தன. இந்த கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.



Next Story