2 மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிப்பு


2 மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிப்பு
x

செய்யாறு அருகே தரைப்பாலம் உடைந்ததால் 2 மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு அருகே தரைப்பாலம் உடைந்ததால் 2 மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தரைப்பாலம்

செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடஇலுப்பை கிராமத்தையொட்டி பாலாற்றின் குறுக்கே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலம் திருவண்ணாமலை மாவட்டத்தையும் காஞ்சீபுரம் மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

காஞ்சீபுரத்தில் இருந்து ஆற்காடு செல்லும் பிரதான சாலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாக்கம் கிராமத்தையும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வட இலுப்பை கிராமத்தையும் இணைக்கும் தரைப்பாலமாகவும் பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தும் சாலையாகவும் அமைந்துள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

வடஇலுப்பை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பெரும்பாக்கம் கிராமத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.

மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது எல்லாம் தரைப்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் இரு கிராம பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாதவாறு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என நெடுங்காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் பணிகள் மேற்கொள்ளாத நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் தரைப்பாலம் முற்றிலும் சேதம் அடைந்து இரு மாவட்டங்களிடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மணல் மூட்டைகள்

இதனால் காஞ்சீபுரத்தில் இருந்து ஆற்காடு செல்லும் பஸ்கள் வெம்பாக்கம் வழியாக சுற்றி ஆற்காடு சென்றது. சில பஸ்கள் ஆற்காட்டில் இருந்து காஞ்சீபுரம் செல்லாமல் வட இலுப்பை கிராமத்தில் நிறுத்தியும், காஞ்சீபுரத்தில் இருந்து ஆற்காடு செல்லும் பஸ்கள் பெரும்பாக்கம் கிராமத்தில் நிறுத்தியும் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் திரும்பி சென்றது.

இதையடுத்து தி.மு‌.க. ஆட்சி பொறுப்பேற்றபின்னர் போர்க்கால அடிப்படையில் ரூ.20 லட்சம் மதிப்பில் மணல் மூட்டைகள் அடுக்கி அதன்மீது கெட்டியான மணல் கொண்டு தற்காலிக சாலை அமைத்து மீண்டும் போக்குவரத்தினை ஒ.ஜோதி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

தரைப்பாலம் உடைந்தது

தொடர்ந்து போக்குவரத்து மேற்கொண்ட நிலையில் 'மாண்டஸ்' புயல் காரணமாக பெய்த கனமழையில் பாலாற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தரைப்பாலத்தின் சேதமடைந்த இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண்சாலையின் மேல் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு தரைப்பாலம் உடைந்தது. இதனால் இன்று முதல் 2 மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தற்போது அரையாண்டு தேர்வு நடைபெறும் நிலையில் நேற்று காலை தேர்வுக்கு வந்த மாணவ-மாணவிகள் தேர்வு முடிந்து செல்லும்போது தரைப்பாலம் உடைந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

எப்படி வீட்டுக்கு செல்வது என திகைத்து நின்ற மாணவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெற்றோர்களை அழைத்து பாதுகாப்புடன் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எச்சரிக்கை செய்தும் ஆபத்தை உணராத பொதுமக்களும், இளைஞர்களும் சேதமடைந்த தரைப்பாலத்தின் மீது சென்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.

எனவே, நீண்ட கால கோரிக்கையான இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story