ஜான் பாண்டியன் பேட்டி


ஜான் பாண்டியன் பேட்டி
x

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்

திருநெல்வேலி

பாளையங்கோட்டை:

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்

செயற்குழு கூட்டம்

நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் ஜான் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்காசியில் போட்டி

செயற்குழு கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது பள்ளி மாணவ -மாணவிகளுக்கு முட்டை வழங்குவதாக கூறி முட்டையின் விலையை உயர்த்தி விட்டனர். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு கவர்னர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும். தென் தமிழகத்தில் சமீபகாலமாக ஜாதிய படுகொலை அதிகரித்துள்ளது.

தேர்தல் வாக்குறுதி

தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.தொடர்ந்து தி.மு.க. அமைச்சர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டு வருகிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் தவறிவிட்டார். தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகமாக காணப்படுகிறது.

கையெழுத்து இயக்கம்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனே 100 நாட்களில் அரசு மதுபானம் இல்லாத மாநிலமாக திகழும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அரசு மதுபான கடைகள் மூடுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளரை வெளியேற்ற கையெழுத்து இயக்கம் வருகிற 30-ந் தேதி நடைபெறும். பட்டியல் வெளியேற்றத்தை வலியுறுத்தி வருகிற 2023-ம் ஆண்டு ஜூலை 2-ந்தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மாநில மாநாடு, 2023-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி பட்டியலில் இருந்து வெளியேற்ற கோரிக்கை நடைபயணம் கன்னியாகுமரி முதல் சென்னைக்கு செல்ல இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இளைஞர் அணி தலைவர் தேர்வு

முன்னதாக இந்த செயற்குழு கூட்டத்தில் இளைஞர் அணி தலைவராக வியங்கோ பாண்டியன் தேர்ந்து எடுக்கப்பட்டார். மேலும் மாநில துணை பொதுச் செயலாளராக நெல்லை வக்கீல் சண்முக சுதாகர், ராமநாதபுரம் அமுதமுரளி, தூத்துக்குடி அருண் பிரின்ஸ், சென்னை தமிழரசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்னர். இந்த கூட்டத்தில், பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன், துணைப் பொதுச்செயலாளர் நெல்லையப்பன், நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், மாநகர செயலாளர் துரைப்பாண்டியன் உள்பட மாநில முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story