அர்ஜூன் சம்பத் பேட்டி
குரங்கணி கோவிலில் 11-ந்தேதி கொடை விழாவுக்கு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அர்ஜூன்சம்பத் கேட்டு கொண்டுள்ளார்.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இங்கு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவுக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்து இருந்தார். அவர் அதேபோன்று குரங்கணி, திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் கோவில்களில் நடைபெறும் விழாக்களுக்கும் சிறப்பு ரெயில் இயக்க கோரிக்கை விடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான பல கோவில்களின் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்து சமய அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சிதம்பரம் கோவிலில் பரம்பரை அறங்காவலர்களாக உள்ள தீட்சிதர்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதற்கு தமிழக அரசு இடம் கொடுக்க கூடாது. அ.தி.மு.க. ஆட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தனபால் சபாநாயகராக இருந்தார். ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் ேசர்ந்தவர் சபாநாயகராக இருப்பதை தி.மு.க. விரும்பவில்லை. இதையே மாமன்னன் திரைப்படத்திலும் காண்பித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.