சிதம்பரத்தில் குழந்தை திருமண விவகாரம்:சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததற்கான ஆதாரம் இல்லைதேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி


சிதம்பரத்தில் குழந்தை திருமண விவகாரம்:சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததற்கான ஆதாரம் இல்லைதேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் குழந்தை திருமண விவகாரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் தெரிவித்தார்.

கடலூர்

சிதம்பரம்,

இருவிரல் பரிசோதனை நடந்ததாக புகார்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குழந்தை திருமண விவகாரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததாக புகார் எழுந்தது. அதன்அடிப்படையில் கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குழந்தை திருமணம் தொடர்பாக சிதம்பரம் தீட்சிதர்கள் சிலரிடமும், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை தேசிய குழந்தைகள் நல ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாரி விசாரணை

இந்த நிலையில் புதுடெல்லி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று மாலை அதிகாரிகளுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். பின்னர் அவர், குழந்தை திருமணம் தொடர்பாக தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தியதுடன், சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதா? எனவும் கேட்டறிந்தார்.

இதையடுத்து அவர், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, குழந்தை திருமண வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பேட்டி

அதன் பிறகு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பத்திரிகை பேட்டியின் போது நடராஜர் கோவில் தீட்சிதர்களின் பெண் குழந்தைகளுக்கு, குழந்தை திருமணம் என்ற பெயரில் நடந்த விசாரணையில் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், தமிழக டி.ஜி.பி.யிடம் இருவிரல் பரிசோதனை சம்பந்தமாக விளக்கம் கேட்டதுடன், 3 கட்டமாக விசாரணை நடத்தினோம். முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட தீட்சிதர்கள், குழந்தை திருமணம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்களிடம் இருவிரல் பரிசோதனை செய்தீர்களா? என விசாரித்துள்ளோம்.

வலுக்கட்டாயமாக...

குழந்தை திருமணம் நடந்ததாக கூறப்படும் சிறுமிகளிடம் விசாரித்தபோது, திருமணம் நடந்ததாக எங்களை வலுக்கட்டாயமாக சொல்ல வைத்தார்கள். அதனால் நாங்கள் ஒத்துக் கொண்டோம் என்று பதில் அளித்துள்ளனர்.

மேற்கண்ட விசாரணையில், சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடந்ததற்கான ஆதாரம் இல்லை. ஆனால் பிரைவேட் பார்ட் பரிசோதனை செய்தது உண்மை. மேலும் இங்கு நடந்த விசாரணை அறிக்கையை நான் எனது ஆணைய தலைவரிடம் கொடுக்க உள்ளேன். அதன் பிறகு அந்த அறிக்கையின் பேரில் 2 அல்லது 3 நாட்களில் நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணையின் போது கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், சிதம்பரம் சப்- கலெக்டர் சுவேதா சுமன், மாவட்ட மருத்துவப்பணிகள் துணை இயக்குனர்(காசநோய்) கருணாகரன், குழந்தை நல மாவட்ட துணை செயலாளர் கோமதி, தொடர்பு அலுவலர் ஹரிதாஸ், தாசில்தார் செல்வகுமார், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் உடனிருந்தனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story