வேலூரில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
வேலூர் நகரில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
வேலூர் நகரில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
முதல்-அமைச்சர் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வேலூர் வருகை தருகிறார். இதையொட்டி வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் விழாவிற்கு பிரமாண்டமான மேடை மற்றும் பயனாளிகள் அமருவதற்கான மேற்கூரை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதனை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை காலை சி.எம்.சி. மருத்துவமனையை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். பின்னர் மாலையில் ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
நாளை மறுநாள் காலை திருப்பத்தூர் மாவட்டத்துக்கு சென்று புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் அங்கு கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
நலத்திட்ட உதவிகள்
மேலும் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணைகள், காசோலைகள் வழங்குகிறார். அன்றைய தினம் மாலை வேலூர் மாவட்டத்துக்கு வருகை தந்து கோட்டை மைதானத்தில் நடைபெறும் விழாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். 2 நாட்கள் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு மக்களை சந்திக்கிறார்.
தமிழகத்தில் கடந்த 35 ஆண்டு காலம் பெய்யாத ஒரு மழை வடதமிழகத்தில் பெய்தது. குறிப்பாக ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் அளவுக்கு அதிக மழை கொட்டி தீர்த்தது. அதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாதனூர், விரிஞ்சிபுரத்தில் கட்டப்பட்டிருந்த பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. அதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி மாதனூர் பாலாற்றில் ரூ.30 கோடியிலும், விரிஞ்சிபுரம் பாலாற்றில் ரூ.27 கோடியிலும் மேம்பாலங்கள் கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டதும், மேம்பாலங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்.
வேலூரில் உயர்மட்ட மேம்பாலங்கள்
வேலூர்-ஆற்காடு சாலையில் சி.எம்.சி. மருத்துவமனையின் முன்பாக சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சி.எம்.சி. மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுரங்கப்பாதை அமைப்பதற்கான நிலத்தை சி.எம்.சி. நிர்வாகத்தினர் தாங்களாகவே கொடுத்தால் உடனடியாக பணிகள் தொடங்கப்படும். இல்லையென்றால் அரசுக்கு உள்ள நில எடுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அந்த நிலத்துக்கான தொகையை சி.எம்.சி. நிர்வாகத்துக்கு வழங்கி கண்டிப்பாக சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
சத்துவாச்சாரி-காங்கேயநல்லூர் இடையே தரைப்பாலம் அமைப்பதற்கு நிலஎடுப்பு உள்ளிட்ட பணிகள் நடந்துள்ளன. அதற்கான திட்டமதிப்பீடு செய்யப்பட்டு இந்தாண்டு அந்த இடத்தில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களை போன்று பழம்பெரும் நகரமான வேலூரிலும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆகியோர் என்னிடம் வலியுறுத்தினார்கள். வேலூரில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை துறைரீதியாக அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து, அதற்கான வாய்ப்புகள் இருந்தால் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.