ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை வழங்க திட்டம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பேட்டி


ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை வழங்க திட்டம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பேட்டி
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 60 வயதுக்கு மேல் 70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டோருக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி, 4 மூத்த குடிமக்கள், 4 கைம்பெண்கள், 1 மாற்றுத்திறனாளி, 120 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட 169 பேருக்கு ரூ.1 கோடியே 89 ஆயிரத்து 830 அளவிற்கு கடனுதவி வழங்கினார்.

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள்

இதனையடுத்து அவர், மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் கூட்டுறவு பண்டக சாலைகள் உள்ளது. இந்த பண்டக சாலைகள் மூலம் ரூ.1,254 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. ஆவினுடன் கூட்டுறவுத்துறை இணைந்து ஆவின் பொருட்கள் விற்பனையகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

பரிவர்த்தனை தரவு

தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் உடனடி பண வினியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (யுபிஐ) சேவையையும் தொடங்க உள்ளோம். மே மாதம் 10-ந் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் இந்த சேவை தொடங்கப்படும். இதன் மூலம் போன்பே, ஜிபே, பேடிஎம் போன்ற வசதிகள் பெற்று ரேஷன் கடைகளில் பொருட்களை நுகர்வோர் பெறலாம். கூட்டுறவு வங்கிகளில் அடமானத்தின்பேரில் விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்விக்கடன் வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

முறைகேட்டை தடுக்க நடவடிக்கை

கூட்டுறவு கடன் சங்கங்களில் முறைகேட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறைகேட்டில் ஈடுபடும் நிர்வாகக்குழு தலைவர், துணைத்தலைவர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 11 பேர் மீதும் நிரந்தர தகுதியிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படும். அதுபோல் சங்க பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் மீனா அருள், கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் நந்தகுமார், கடலூர் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் திலீப்குமார், கூட்டுறவு சரக துணைப்பதிவாளர்கள் பிரியதர்ஷினி, நாராயணசாமி, நளீனா, சொர்ணலட்சுமி, சுகந்தலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story