கிராம நிர்வாக அலுவலருக்கு மிரட்டல்
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாணார்பட்டி அருகே உள்ள வி.எஸ்.கோட்டை ஊராட்சி மார்க்கம்பட்டியில் தடுப்பணையில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் மண்பாதை அமைத்துள்ளனர். இதனால் குளங்களுக்கு மழைநீர் செல்வது தடைபட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் வி.எஸ்.கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சின்னையா, ஊராட்சி செயலர் செல்வராமன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர். இதற்கு அதேஊரை சேர்ந்த செல்வம் (வயது 40), திருப்பதி (65), மூர்த்தி (19) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்ற அவர்கள் 3 பேரும், அங்கிருந்த கோபாலகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதற்கிடையே கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பாக சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.