சேலத்தில் மதுபோதையில் தனது மோட்டார் சைக்கிளுக்கு தானே தீ வைத்தவர் கைது


சேலத்தில் மதுபோதையில் தனது மோட்டார் சைக்கிளுக்கு தானே தீ வைத்தவர் கைது
x

சேலத்தில் மதுபோதையில் தனது மோட்டார் சைக்கிளுக்கு தானே தீ வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

சேலம் குகை செங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55). இவர், பாரதீய ஜனதா கட்சியின் குகை மண்டல தலைவராக உள்ளார். இவரது வீடு அருகே கடந்த 29-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். பின்னர் அவர் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பெட்ரோல் டேங்கை திறந்து அதில் தீக்குச்சியை பற்ற வைத்து போட்டார்.

அப்போது, மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மதுபோதையில்...

மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்தபோது, மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆகாத ஆத்திரத்தில் வாலிபர் தீ வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில், கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (39) என்பதும், சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்தபோது, மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆகாததால் கோபம் அடைந்த அவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து கொளுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

வாலிபர் கைது

பொதுமக்கள் இடையே பீதி ஏற்படுத்தும்படி நடந்து கொண்ட மணிகண்டனை செவ்வாய்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, மோட்டார் சைக்கிளை அதன் உரிமையாளரே தீ வைத்து எரித்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story