கொத்தடிமை தொழிலாளர்கள் பற்றி புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்
கொத்தடிமை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.
கொத்தடிமை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொலைபேசி எண் அறிமுகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான உயர்மட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில், கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த புகார் தெரிவிக்க 1800 4252 650 என்ற இலவச தொலைபேசி எண் நினைவில் கொள்வது கடினமாக உள்ளது என்றும், அதனால் அதற்கு சுருக்க கோடு உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த புகார்கள் தெரிவிக்க, பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் பொருட்டு பி.எஸ்.என்.எல். மூலம் 155214 என்ற இலவச தொலைபேசி எண் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது.
கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்கள் தெரிவிக்க, ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும், தற்போது உருவாக்கப்பட்டுள்ள 155214 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.
தண்டனை
மேலும் தொழிற்சாலைகள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களில் கொத்தடிமை தொழிலாளர்கள் எவரேனும் பணியில் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது 1860-ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டம் மற்றும் 1976-ம் ஆண்டு கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டங்களின் கீழ் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் எவரும் பணியமர்த்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது 18 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் பணியமர்த்தப்பட்டு இருப்பது தெரியவந்தாலோ, அது தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி அழைப்பு எண் 155214 மற்றும் தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண் 0461-2340443 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.