சென்னை ஐ.ஐ.டி.யில் கட்டுமான தொழில்நுட்பம் பற்றிய ஆன்லைன் சான்றிதழ் படிப்பு அறிமுகம்
சென்னை ஐ.ஐ.டி.யில் கட்டுமான தொழில்நுட்பம் பற்றிய ஆன்லைன் சான்றிதழ் படிப்பு அறிமுகம்: விண்ணப்பிக்க அடுத்த மாதம் 20-ந்தேதி கடைசிநாள்.
சென்னை,
அனைவருக்கும் ஐ.ஐ.டி. என்ற இலக்கை எட்டும் வகையில் சென்னை ஐ.ஐ.டி. பல்வேறு புதிய படிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பற்றிய ஆன்லைன் சான்றிதழ் படிப்பை சென்னை ஐ.ஐ.டி. தற்போது அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த புதிய படிப்பில் கட்டுமான தொழில்நுட்பம் மற்றும் அதன் மேலாண்மை குறித்த நடைமுறைகளில் உள்ள நவீன முன்னேற்றங்கள் கற்றுத் தரப்பட உள்ளன.
கட்டுமானம் நடைபெறும் இடங்களை திறமையுடன் நிர்வகிப்பது எப்படி? என்பது பற்றிய தகவலையும், அதேபோல் திட்டப்பணிகளை சரியான நேரத்தில், குறைந்த செலவில் உயர்தரத்தில் முடிக்க தேவையான திறமையை பெரும்பாலும் யாரும் கற்றுத்தருவது கிடையாது.
அதனை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யின் மூத்த பேராசிரியர் குழுவினர் இந்த பாடத்திட்டத்தை கற்பிக்க இருக்கிறார்கள். 126 மணி நேர ஆன்லைன் வகுப்புகள், 42 மணி நேர ஆசிரியர் நிபுணர்களுடன் ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடல் என ஆன்லைன் வாயிலாகவே வகுப்புகள் நடைபெற உள்ளன.
இந்தப்படிப்புக்கான முதல் வகுப்பு செப்டம்பர் 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி கடைசிநாள் ஆகும். விருப்பம் உள்ளவர்கள் https://code.iitm.ac.in/construction-technology-and-management என்ற இணையதளம் மூலம் சென்று விண்ணப்பிக்கலாம்.