தங்கப்பத்திர திட்டத்தில் முதலீடு செய்யலாம்
தங்கப்பத்திர திட்டத்தில் முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை தபால் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவாதத்துடன் கூடிய பாதுகாப்பான தங்கப் பத்திர திட்டம் தபால் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு பாதுகாப்பான முதலீடு ஆகும். குறைந்தபட்சம் 1 கிராம் முதல் 4 கிலோ வரையிலான மதிப்பு கொண்ட தங்கப்பத்திரங்களை தனிநபரும், 20 கிலோ வரை டிரஸ்டுகளும் பெற்றுக்கொள்ளலாம். தங்கத்தின் விலை 24 கேரட்டின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். தற்போதைய ஒரு கிராமின் விலை ரூ.5 ஆயிரத்து 926 ஆகும். ஆண்டுக்கு 2.5 சதவீதம் வீதம் வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு பிறகு அப்போதைய தங்கத்தின் மதிப்பில் பணமாக பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன்பெற, பூர்த்தி செய்யப்பட்ட படிவம், பான் கார்டு நகல், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தில் சேர இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 5 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.