சேலம் புதிய பஸ்நிலையத்தில்செல்போன்கள் திருடியதாக 4 பேரிடம் விசாரணை
சேலம் புதிய பஸ்நிலையத்தில் செல்போன்கள் திருடியதாக 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம்,
சேலம் புதிய பஸ்நிலையத்திற்கு வரும் வெளியூர் பயணிகளிடம் மர்ம நபர்கள் செல்போன்களை திருடி செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீசார் செல்போன்களை குறி வைத்து திருடும் கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில், பள்ளப்பட்டி போலீஸ் ஏட்டு ஜெயக்குமார் நேற்று பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது, பஸ் நிலையத்திற்குள் 4 பேர் சந்தேகம்படும்படி நிற்பதும், அவர்களின் கைகளில் அதிகளவு செல்போன்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனால் அங்கு சென்ற ஏட்டு ஜெயக்குமார், 4 பேரை பிடித்து விசாரித்தார். அதில், அவர்கள் வைத்திருப்பது திருட்டு செல்போன்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், பெங்களூரு ஜலஹல்லி கிராஸ் சிகிருமா காலனியை சேர்ந்த ராஜேஷ் (வயது 29) மற்றும் அவருடன் இருந்த 17 வயதான மூன்று சிறுவர்களும் புதிய பஸ்நிலையத்தில் நோட்டமிட்டு பஸ் பயணிகளிடம் செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.