பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் ஆவணங்களை விசாரணை குழுவினர் ஆய்வு


பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் ஆவணங்களை விசாரணை குழுவினர் ஆய்வு
x

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் ஆவணங்களை விசாரணை குழுவினர் ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த குமரிமன்னன், ராணிபேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் குமரிமன்னன் அங்கு பணியிட மாற்றமாகி செல்லாமல் இருந்தார். இந்நிலையில் குமரிமன்னன் மீது சில புகார்கள் இருந்துவந்ததால், அவர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று முன்தினம் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் குமரிமன்னன் பெரம்பலூரிலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும், உயர் அலுவலர்களின் முன் அனுமதி பெறாமல் பெரம்பலூரை விட்டு வெளியூருக்கு செல்லக்கூடாது என்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தியிருந்தார்.

மேலும் பெரம்பலூர் நகராட்சியில் குமரிமன்னன் ஆணையராக பணிபுரிந்த காலத்தில் அவரால் கையாளப்பட்ட நகரமைப்பு பிரிவு கோப்புகள், வருவாய், சொத்து வரி விதித்தல் மற்றும் இதர கோப்புகள், பொது சுகாதாரப்பிரிவில் தனியாரிடம் கொள்முதல் சம்பந்தப்பட்ட கோப்புகள் மற்றும் பொறியியல் பிரிவு கோப்புகள் ஆகியவைகளை ஆய்வு செய்து குறைபாடுகள் அல்லது முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா? என்பதை கண்டறிந்து 3 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி விசாரணை குழு தலைவராக வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், உறுப்பினர்களாக மறைமலைநகர் நகராட்சி ஆணையர் லட்சுமி, வால்பாறை நகராட்சி ஆணையர் பாலு, காஞ்சீபுரம் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கணேசன், மறைமலைநகர் நகராட்சி நகரமைப்பு அலுவலர் தாமோதரன், திருவேற்காடு நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பெர்ட் அருள்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விசாரணை குழுவினர் நேற்று பெரம்பலூர் வந்தனர். அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் முகாமிட்டு காலை முதல் மாலை வரை ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதற்கிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட குமரிமன்னன், விசாரணை செய்யும் குழு முன்பு ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆனால் அவர் நேரில் ஆஜராகாததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story