ப.ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளரிடம் விசாரணை


ப.ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளரிடம் விசாரணை
x
தினத்தந்தி 22 Nov 2022 12:30 AM IST (Updated: 22 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

தேனி

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசப்பட்டி அருகே சொர்க்கவனம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி ஒரு சிறுத்தை மின்வேலியில் சிக்கியது. அதை வனத்துறையினர் மீட்க முயன்றபோது, உதவி வன பாதுகாவலர் மகேந்திரனை தாக்கிவிட்டு தப்பியோடியது. இந்நிலையில், அதே பகுதியில் உள்ள தோட்டத்து வேலியில் வைக்கப்பட்டு இருந்த சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை இறந்தது. விசாரணையில் அந்த இடம், தேனி அ.தி.மு.க. எம்.பி. ப.ரவீந்திரநாத் உள்பட 3 பேரின் பெயரில் இருப்பதாக தெரியவந்தது. இதனால் எம்.பி.யின் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்து இருந்த அலெக்ஸ்பாண்டியன், தோட்ட மேலாளர்களான ராஜவேல், தங்கவேல் ஆகிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ப.ரவீந்திரநாத் எம்.பி.க்கும் சம்மன் அனுப்பி வரவழைத்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ப.ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்டத்தில் வேலைபார்த்த மற்றொரு மேலாளரான கிருஷ்ணா என்பவர் நேற்று தேனி வனச்சரகர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவருடன் வக்கீல்கள் சிலரும் வந்திருந்தனர். கிருஷ்ணாவிடம் காலை 11 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை வனச்சரகர் செந்தில்குமார் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு அவரை வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனச்சரகரிடம் கேட்டபோது, "சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் ஆஜரான அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது" என்றார்.


Next Story