போலீஸ்காரர்களுக்கு புலன் விசாரணை பயிற்சி
பண்ருட்டியில் போலீஸ்காரர்களுக்கு புலன் விசாரணை பயிற்சி நடந்தது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டத்தில் முதன் முதலாக மாவட்ட போலீசார் பயன் பெறும் வகையில் புலன் விசாரணை மையம் பண்ருட்டி போக்குவரத்து காவல் நிலைய வளாக பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் நடந்த புலன் விசாரணை பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த மாவட்டத்தில் உள்ள காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி மையமாக, இந்த மைய்யம் செயல்படும். மேலும், போலீசாரின் விசாரணையை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களில் ஒரு உட்கோட்டத்துக்கு 6 பேர் வீதம் மொத்தம் 42 பேர் வாரத்துக்கு 2 குழுக்களாக பயிற்சி பெறுவார்கள்.
பயிற்சி பெற்றவர்கள், சிறப்பாக செயல்படுகிறார்களா என்பதை அறிய மேலும், ஒரு சிறப்பு கண்காணிப்பு வகுப்பு நடத்தி அறிந்து கொள்ளப்படும். இதில் முதல் தகவல் அறிக்கை தயாரிப்பு பணி மற்றும் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வது, கணினியில் அனைவரும் பயிற்சி பெற்று வழக்குகளை பராமரிப்பு செய்வது போன்ற பயிற்சிகள் துல்லியமாக அனுபவம் வாய்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போ லீசாரை கொண்டு அளிக்கப்படும். இதன் மூலம் போலீசாரின் விசாரணை திறன் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா வரவேற்றார். இதில் சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆரோக்கியராஜ், காவ்யா, குமார், பிரபு, ரவிச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு வணிக நலவாரிய தலைவர் த.சண்முகம், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு மண்டல செயலாளர் வீரப்பன், முன்னாள் நகரசபை துணைத் தலைவர் எஸ். விஜயரங்கன், ஜேப்பியார் ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகீர்உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.