தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வானவர்களுக்கு முதலீட்டு நிதி


தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வானவர்களுக்கு முதலீட்டு நிதி
x

தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வானவர்களுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முதலீட்டு நிதி வழங்கினார்.

ராணிப்பேட்டை

தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வானவர்களுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முதலீட்டு நிதி வழங்கினார்.

முதலீட்டு நிதி

வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழாவில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வான 19 நபர்களுக்கு ஆணைகளையும், 15 நபர்களுக்கு தொழில் தொடங்கிட ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான சமுதாய முதலீட்டு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, ஆணை, முதலீட்டு நிதி வழங்கினார்.

தொடர்ந்து, சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து நடத்திய 200-க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கையெழுத்து இயக்கம்

முன்னதாக, பெண்களை மதித்து நடக்கவும், சமுதாயத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு அளித்து சமஉரிமை அளிப்போம் என்றும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்போம் என்றும் கையெழுத்து இயக்கத்தில் கலெக்டர் கையெழுத்திட்டார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் நானில தாசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் சே.வெங்கட்ரமணன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன்,தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கங்காதரன், உதவி திட்ட அலுவலர் சுபாஷ் மற்றும் இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.


Next Story