221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.20 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது முதல்-அமைச்சர் பேச்சு
221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக தமிழகத்துக்கு ரூ.2.20 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருப்பூர்,
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தலைப்பில் திருப்பூர் மண்டல மாநாடு, திருப்பூரில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பட்ஜெட்டில் அறிவித்தபடி கயிறு வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதலை உலக அரங்குக்கு கொண்டு செல்லும் வகையில் கோவையில் அமைக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்' என்ற புதிய நிறுவனத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:-
ரூ.2.20 லட்சம் கோடி முதலீடு
கடந்த 15 மாதத்துக்குள் தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டு மாநாடுகளின் மூலமாக 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அதன்மூலம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 727 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரூ.1,300 கோடி முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 49 குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களும் இதில் அடங்கும். புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் ரூ.1,522 கோடி முதலீடு செய்து உற்பத்தியை தொடங்கி 1,909 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திருக்கிறது.
கடன் உத்தரவாத திட்டம்
தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சொத்து பிணையில்லா கடன்களை எளிதாக பெறலாம். இணைய தளம் மூலம் இத்திட்டம் இயங்கும். முதல் கட்டமாக 6 வங்கிகளை இணைப்போம். அடுத்த ஆண்டுக்குள் அனைத்து வங்கிகளும் இணைக்கப்படும்.
அதேபோல குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வங்கி கடனுக்கான சொத்து பிணையம் பத்திர பதிவு செய்திட ஆன்லைன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. வங்கிகள் மூலமாக எளிதில் கடன் கிடைக்க தாட்கோ வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் இதன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ரூ.2,113 கோடி கடன்
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு 2,092 நிறுவனங்களுக்கு ரூ.2,113 கோடிக்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 99 சதவீதம் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குதான் கடன் வழங்கப்பட்டு உள்ளது. சிட்கோ மூலம் 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் 81.85 ஏக்கர் மொத்த பரப்பில் அமைய இருக்கின்றன. சென்னையில் அம்பத்தூர், கிண்டி தொழிற்பேட்டைகளில் ரூ.150 கோடியில் 2 அடுக்குமாடி தொழில் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.75 கோடி திட்ட மதிப்பீட்டில் மாநில புத்தொழில் மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறுந்தொழில் நிறுவனங்களை கொண்ட பல்வேறு குழுமங்களை அமைக்க முடிவு எடுத்திருக்கிறோம்.
புதிய அறிவிப்பு
மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை இங்கு வெளியிடலாம் என நினைக்கிறேன்.
'ஹோம் டெக்ஸ்டைல்ஸ்' எனப்படும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் ஆண்டொன்றுக்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வகைப்பொருள்கள் தயாரிப்பை சிறப்பு வகை தொழில்கள் பிரிவில் சேர்த்து, குறு, சிறு நடுத்தர தொழில் துறையின் மூலம் முதலீட்டு மானியம் வழங்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த கோரிக்கை ஏற்கப்படுகிறது.
சிறப்பு வகை தொழில்கள் பிரிவில் சேர்க்கப்பட்டு, முதலீட்டு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கிறேன். இதனால் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் பயன்பெறும்.
இதன்மூலமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு செவிமடுக்க இந்த அரசு எப்போதும், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கன்னம் தொட்டு வாழ்த்திய பாட்டி
திருப்பூர் மண்டல மாநாட்டில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காமராஜ்நகர் 60 அடி சாலையின் இருபுறமும் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் 60 அடி சாலையில் நடந்தே சென்று அந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அந்த வரவேற்பை ஏற்று மு.க.ஸ்டாலின் நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு பாட்டி மு.க.ஸ்டாலினின் கன்னத்தை தொட்டு வாழ்த்து தெரிவித்தார். இதனால் நெகிழ்ச்சியடைந்த அவர், அந்த பாட்டியிடம் சென்று நலம் விசாரித்து சென்றார். இது ரசிக்கும்படியான நிகழ்வாக அமைந்தது.
அதேபோல வரவேற்க காத்திருந்த சிறுவர்-சிறுமிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.