பா.ஜ.க.வில் சேர சசிகலாவுக்கு அழைப்பு
பா.ஜ.க.வில் சேர சசிகலாவுக்கு அக்கட்சியின் சட்டமன்ற கட்சித்தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:
சசிகலாவுக்கு அழைப்பு
புதுக்கோட்டையில் நேற்று சட்டமன்ற பா.ஜ.க. தலைவா் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது சசிகலா அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், '' சசிகலாவை சேர்த்துவிட்டால் அ.தி.மு.க. இன்னும் வலுவாக இருக்கும். அ.தி.மு.க.வில் சேர்க்காவிட்டால், பா.ஜ.க.வுக்கு வந்தாலும் நிச்சயமாக நாங்கள் அவரை வரவேற்க தயாராக உள்ளோம். நிச்சயமாக அது எங்களுக்கு உறுதுணையாக இருக்கும்'' என்றார்.
அண்ணாமலை பதில்
இதற்கிடையே திருச்சியில் நேற்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவரிடம் பா.ஜ.க.வில் சசிகலா சேர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், 'சசிகலாவை பா.ஜனதாவில் இணைப்பது குறித்து நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து. பா.ஜனதாவின் கருத்து இல்லை. பா.ஜனதாவில் யார் வேண்டுமானாலும் இணையலாம். அவர்கள் இணைவது குறித்து டெல்லி தலைமை முடிவு எடுக்கும்' என்று தெரிவித்தார்.