சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
அம்பை:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அம்பலவாணபுரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் ராஜா. தனியார் கார் டிரைவர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு தனது மனைவியுடன் வடக்கு பாப்பான்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கீழாம்பூர் அருகே வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ராஜா மனைவியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர்.
இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் பஞ்சாயத்து போர்டு தெருவை சேர்ந்த சப்பானி மகன் முருகன் என்ற கீர்த்தி (27), அவரது நண்பர் கோவில்குளத்தைச் சேர்ந்த முருகன் மகன் வடிவேல் என்ற மணிகண்டன் (32) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பல்கலைச்செல்வன், குற்றம் சாட்டப்பட்ட முருகன், வடிவேல் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் நேற்று முருகன் கோர்ட்டில் ஆஜரானார். ஆஜராகாத வடிவேலுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.