பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது; 126 பவுன் நகைகள் மீட்பு


தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து, 126 பவுன் நகைகளை மீட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து, 126 பவுன் நகைகளை மீட்டனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வாகன தணிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணித்து தடுக்கும் வகையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. அதன்படி சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் பன்னம்பாறை சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

கைது

அவர் சாத்தான்குளம் கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்த சின்னத்துரை மகன் கொடிமலர் (வயது 40) என்பதும் தெரியவந்தது. அவர் ஒரு ஸ்குரு டிரைவர், கட்டிங்பிளேயர் வைத்திருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சாத்தான்குளம் பகுதியில் 9 திருட்டு சம்பவத்திலும், நாசரேத்தில் 2 திருட்டு சம்பவத்திலும், தட்டார் மடத்தில் 4 திருட்டு சம்பவத்திலும், மெஞ்ஞானபுரத்தில் ஒரு திருட்டு சம்பவத்திலும், திருச்செந்தூரில் 3 திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

126 பவுன் நகைகள் மீட்பு

இதனை தொடர்ந்து சாத்தான்குளம் போலீசார் கொடிமலரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 126 பவுன் தங்க நகைகள், மோட்டார் சைக்கிள், கலர் டி.வி. உள்பட மொத்தம் ரூ.48 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை தனிப்படையினர் மீட்டுள்ளனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story