உயிர் பலி வாங்க காத்திருக்கும் இரும்பு கம்பிகள்
பழனி அருகே தொடங்கிய வேகத்தில் பாலம் கட்டும் பணி முடங்கியது. உயிர் பலி வாங்க காத்திருப்பதை போல இரும்பு கம்பிகள் காட்சி அளிக்கின்றன.
பாலம் கட்டுமான பணி
பழனி அருகே பாப்பம்பட்டி கிராமத்துக்கு செல்வதற்கு, கொழுமம் சாலை பிரிவில் இருந்து சாலை உள்ளது. இங்குள்ள தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதனையடுத்து புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர்.
இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்த பழைய பாலம் அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பிறகு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு புதிய பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கியது. ஆனால் தொடங்கிய வேகத்தில் பாலம் கட்டும் பணி முடங்கியது. தற்போது எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் புரியாத புதிராக உள்ளது.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்
இந்தநிலையில் அந்த வழியாக மக்கள் சென்றுவர ஒரு பகுதியில் பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம், அதில் இருந்து வெளியே நீண்டு கொண்டிருக்கும் இரும்பு கம்பிகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இவை, மனித உயிர்களை காவு வாங்க காத்திருப்பதை போல காட்சி அளிக்கின்றன.
குறிப்பாக இரவு நேரத்தில், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பாப்பம்பட்டி பிரிவில் பாலம் கட்டுமான பணியை மீண்டும் தொடங்கி முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரணம் என்ன?
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த 3 மாதத்துக்கும் மேலாக பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. கட்டுமான பணி நடக்கும் பகுதியில் போதிய தடுப்புவேலி எதுவும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே பாலம் கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் பணி மேற்கொள்வதில் சற்று தாமதம் ஆனது. தற்போது எல்லா பிரச்சினைகளும் முடிந்து விட்டதால் இன்னும் ஒரு வாரத்துக்குள் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.