இரும்பு சங்கிலி கழன்று விழுந்து 2 பேர் காயம்
பழனி மின்இழுவை ரெயில் நிலையத்தில் இரும்பு சங்கிலி கழன்று விழுந்து 2 பேர் காயம் அடைந்தனர்.
பழனி முருகன் கோவில் 3-வது மின்இழுவை ரெயிலில் நவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், மின் இழுவை ரெயில் நிலைய ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் என ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரெயில் நிலையத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது என்ஜினில் இருந்து ரெயில் பெட்டியில் இணைக்கப்பட்ட இரும்பு சங்கிலி ஒன்று எதிர்பாராதவிதமாக கழன்று அருகில் நின்றிருந்த தற்காலிக பணியாளர்களான அடிவாரத்தை சேர்ந்த சந்துரு (வயது 27), ஆயக்குடியை சேர்ந்த கார்த்தி (27) ஆகியோர் மீது விழுந்தது. இதில் 2 பேரும் காயம் அடைந்தனர். பின்னர் அவர்களை சக பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.