குப்பையில் கிடந்த இரும்புச்சத்து டானிக் பாட்டில்கள்
இரும்புச்சத்து டானிக் பாட்டில்கள் குப்பையில் கிடந்தன.
குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு வழங்கக்கூடிய இரும்புச்சத்து டானிக் பாட்டில்கள் குப்பையில் கிடந்தது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குப்பையில் கிடந்த டானிக் பாட்டில்கள்
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ். காலனியில் உள்ள சேகர் காலனியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் அருகே உள்ள மழைநீர் வடிகால் வாரியானது தற்போது குப்பைக்கிடங்கு போல் செயல்படுகிறது. நேற்று காலை மழைநீர் வடிகால் வாரியின் ஓரத்தில் குப்பைகளுக்கு மத்தியில் 200 டானிக் பாட்டில்கள் கிடந்தன. அந்த மருந்து பாட்டில்களில் "அயன் அண்ட் போலிக் ஆசிட் சிரப் -ஐ.பி" என எழுதப்பட்டு இருந்தது.
இந்த டானிக் பாட்டில்கள் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படக்கூடியவையாகும். இரும்புச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்த டானிக் வழங்கப்பட்டு வருகிறது.
காலாவதியானது
குப்பைகளுடன் கிடந்த டானிக் பாட்டில்கள் அனைத்தும் கடந்த மாதத்துடன் காலாவதியானவையாகும். காலாவதியான டானிக் பாட்டில்களை முறையாக திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஆனால் அப்படி திரும்ப ஒப்படைக்கப்படாமல் குப்பைகளில் இந்த டானிக் பாட்டில்கள் வீசப்பட்டுள்ளன.
இதை பார்த்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குப்பைகளுடன் சத்து டானிக் பாட்டில்கள் கிடந்த தகவல் பரவிய சிறிது நேரத்தில் குப்பைகளில் கொட்டப்பட்ட டானிக் பாட்டில்கள் எல்லாம் அகற்றப்பட்டன.
இதை யார் அங்கு கொண்டு வந்து கொட்டினார்கள்?. அரசு ஆஸ்பத்திரிக்கு சொந்தமான இவ்வளவு டானிக் பாட்டில்கள் இந்த பகுதிக்கு எப்படி வந்தது? என்ற கேள்விகள் எழுகின்றன. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
காரணம் யார்?
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ஒரு ஆஸ்பத்திரியில் குறிப்பிட்ட மருந்து அதிக அளவு இருப்பு இருந்தால், அதை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு மருந்து வினியோக கிடங்குக்கு தகவல் சொல்ல வேண்டும். காலாவதியாகும் வரை மருந்துகளை வைத்திருக்கக் கூடாது என்றெல்லாம் விதிகள் உள்ளன.
அப்படியிருக்க இந்த டானிக் பாட்டில்களை குப்பையில் வீசிச்சென்றது யார்? என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை
குப்பைகளுடன் இரும்புச்சத்து டானிக் பாட்டில்கள் கிடந்த தகவலையடுத்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் கல்யாணி உத்தரவின் பேரில் வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் அகிலன் தலைமையில் மாவட்ட தாய் சேய் நல அலுவலர், மருங்குளம் மருத்துவ அலுவலர், கிராம சுகாதார செவிலியர், மருந்தாளுனர், செவிலியர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர்.
அப்போது நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் குடியிருக்கும் அங்கன்வாடி பணியாளர் ஒருவர், அவர் பணிபுரிந்த அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையில் அங்கன்வாடி குழந்தைகளுக்காக கொடுக்கப்பட்ட இரும்பு சத்து பாட்டில்களை வீட்டிற்கு எடுத்து வந்ததும், அவர் திடீரென வீட்டை காலி செய்தபோது இரும்பு சத்து பாட்டில்கள் காலாவதியாகி இருந்ததால் அவற்றை குப்பையில் கொட்டியுள்ளதும், இந்த இரும்பு சத்து டானிக் பாட்டில்கள் சுகாதாரத் துறையில் இருந்து வழங்கப்பட்டவை அல்ல என்பதும் தெரியவந்தது.
சுகாதாரத்துறையை பொறுத்தவரை மருந்து பொருட்கள் காலாவதி ஆவதற்கு முன்பே பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவற்றை வேறு சுகாதார நிலையங்களுக்கு கொடுத்து வீணாகாமல் பயன்படுத்தி வருகின்றோம் என வட்டார மருத்துவ அலுவலர் அகிலன் தெரிவித்தார்.