கொழுந்தம்பட்டு பஞ்சாயத்தில் முறைகேடுகள் கண்டுபிடிப்பு
கூடுதல் கலெக்டர் ஆய்வின் போது கொழுந்தம்பட்டு பஞ்சாயத்தில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக செயலாளர், களப்பணியாளர் ஆகியோர் பிணயிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் கொழுந்தம்பட்டு பஞ்சாயத்தில் கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங் நேரில் சென்று களப்பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது கொழுந்தம்பட்டு கிராமத்தில் தூய்மை பணிகள் முறையாக நடைபெறாததும், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பணி நடைபெறுவதற்கு ஆணை வழங்கிய இடத்தில் பணிகளை செய்யாமல் வேறு இடத்தில் பணிகள் நடைபெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல 100 நாள் வேலை திட்டத்தில் போலியாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இந்த முறைகேடு விவரங்களை கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், கலெக்டருக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து கொழுந்தம்பட்டு ஊராட்சி செயலாளர் சக்கரவர்த்தியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
இதேபோல கலெக்டர் பரிந்துரையின் பேரில் களப்பணியாளர் தமிழரசியை பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.