சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10½ கோடி மதிப்பிலான கருவிகள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது பொதுக்கணக்கு குழு தலைவர் குற்றச்சாட்டு
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10½ கோடி மதிப்பிலான கருவிகள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்று சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
சேலம்,
ஆய்வுக்கூட்டம்
சேலத்துக்கு நேற்று சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், குழுவினர் நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டங்கள் பற்றி கேட்டு அறிந்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், சதாசிவம், பொது கணக்கு குழு உறுப்பினர்கள் காந்திராஜன், கலைவாணன், மாரிமுத்து, ராஜமுத்து, வேல்முருகன், சிந்தனைசெல்வன், சுதர்சனம், பிரகாஷ், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி, கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு ஆஸ்பத்திரி
முன்னதாக இந்த குழுவினர் சேலம் மத்திய சிறைக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டு உள்ள செல்போன் கோபுர கருவிகளின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற குழுவினர் அங்குள்ள உயிரியல் ஆய்வகத்தை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்த விவரங்களின் பதிவேட்டை பார்வையிட்டனர்.
அப்போது அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் வெவ்வேறு இடத்தில் நடைபெறுவதை பார்வையிட்ட குழுவினர். நோயாளிகள் அனைத்து பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் எடுத்துக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர்களிடம் தெரிவித்தனர்.
பின்னர் மெய்யனூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு, கருப்பூரில் உள்ள அரசு மாணவர் விடுதி, பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
முறைகேடு
மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 2016-17-ம் ஆண்டில் ரூ.10 கோடியே 69 லட்சம் மதிப்பில் மருத்துவ கருவி வாங்கப்பட்டு அது பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த கருவி வாங்கியதில் அப்போது இருந்த அலுவலர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்து உள்ளனர். ரூ.10 லட்சத்துக்கும் மேல் மருத்துவ கருவி வாங்க மருத்துவ அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. எனவே இந்த கருவி தன்னிச்சையாக வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே கருவி வாங்கியதில் முறைகேடு நடந்து இருக்கலாம். மேலும் மாவட்டத்தில் கனிம வளங்கள் வெட்டியதிலும் முறைகேடு நடந்து உள்ளது. இவைகள் குறித்து விசாரணை நடத்த அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.