தடை விதித்தால் போதுமா? `பிளாஸ்டிக்' ஒழியுமா?
தடை விதித்தால் போதுமா? `பிளாஸ்டிக்' ஒழியுமா? என்பது பற்றி பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து உள்ளனர்
எங்கும் பிளாஸ்டிக். எதிலும் பிளாஸ்டிக். அதுதான் இன்றைய நம்முடைய அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது.
காலையில் எழுந்ததும் பல் துலக்குவது, பாத்திரம் விளக்குவது, காய்கறி வாங்குவது என அனைத்து பயன்பாட்டிலும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆக்கிரமிப்புதான்.
எளிதில் எடுத்துச்செல்லலாம், வேண்டாம் என்றால் வீசிவிட்டுப் போகலாம். விலையோ மலிவு, பொருளும் மெலிது, கையாளுவது எளிது. இதுபோன்ற சாதகமான அம்சங்கள்தான் நமது பழக்க வழக்கங்களில் இருந்து, பிளாஸ்டிக் பொருட்களைப் பிரிக்க முடியாமல் செய்கிறது.
எங்கும் பிளாஸ்டிக். எதிலும் பிளாஸ்டிக். அதுதான் இன்றைய நம்முடைய அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது.
காலையில் எழுந்ததும் பல் துலக்குவது, பாத்திரம் விளக்குவது, காய்கறி வாங்குவது என அனைத்து பயன்பாட்டிலும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆக்கிரமிப்புதான்.
எளிதில் எடுத்துச்செல்லலாம், வேண்டாம் என்றால் வீசிவிட்டுப் போகலாம். விலையோ மலிவு, பொருளும் மெலிது, கையாளுவது எளிது. இதுபோன்ற சாதகமான அம்சங்கள்தான் நமது பழக்க வழக்கங்களில் இருந்து, பிளாஸ்டிக் பொருட்களைப் பிரிக்க முடியாமல் செய்கிறது.
பிளாஸ்டிக்கின் வரவால் நாம் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து விலகிப் போய்க்கொண்டு இருக்கிறோம்.
ஒரு பிளாஸ்டிக் பையின் பயன்பாடு என்பதோ, குறுகிய நேரம் மட்டும்தான். அதன் பிறகு அதை தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் அது ஏற்படுத்தக்கூடிய எதிர்விளைவுகளை யாரும் எண்ணி பார்ப்பது இல்லை.
இதை எல்லோரும் தெரிந்தே செய்கிறோம் என்று சுற்றுச்சூழல், உயிரின ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். அதிலும் அதிகம் படித்தவர்கள்தான் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை அதிகளவில் ஊக்கப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
பயன்படுத்த தடை
பிளாஸ்டிக் பொருட்களில் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருப்பவை, 'யூஸ் அன்ட் துரோ' என்று சொல்லப்படுகிற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகள்தான்.
இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதியில் இருந்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்ததோடு, இந்த பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, வினியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்துக்கும் தடை விதிப்பதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது. பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, பலூனில் கட்டப்படும் பிளாஸ்டிக் குச்சி, பிளாஸ்டிக் கொடி, மிட்டாயின் பிளாஸ்டிக் உறை, ஐஸ்கிரீம் குச்சி, அலங்கார வேலைகளுக்கான தெர்மகோல், சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் முள்கரண்டி, தேக்கரண்டி, கத்தி, சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை சுற்றி கட்டப்படும் பிளாஸ்டிக் சுருள்கள், பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. பேனர்கள் ஆகியவற்றுக்கும் இந்த தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, உணவுப்பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள், தெர்மகோல் தட்டுகள், டம்ளர்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சுக்குழாய்கள், தூக்குபைகள் ஆகியவற்றை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாத்தியமாகி இருக்கிறதா?
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை கண்காணிக்கவும், அமல்படுத்தவும் தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு, பிளாஸ்டிக் தடையை கண்காணித்து வருகிறது. இதில் அனைத்து துறை செயலாளர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் உள்பட 19 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழு 2 மாதத்துக்கு ஒருமுறை கூடி பிளாஸ்டிக் தடை குறித்து விவாதித்து வருகிறது. மேலும், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த மாவட்டம், மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய அளவில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது போன்ற தகவல்களை சமீபத்தில் தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
இந்த தடை உத்தரவு வருவதற்கு முன்பே தமிழக அரசு 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை தொடங்கி, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தியது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தானியங்கி எந்திரங்களும் வைக்கப்பட்டு, பொதுமக்கள் மஞ்சப்பை வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை, நடைமுறையில் சாத்தியமாகி இருக்கிறதா? என்பது பற்றி பலதரப்பு மக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
நீர் நிலைகள் பாதிப்பு
நெல்லையை சேர்ந்த சமூக ஆர்வலர் நிவேக்:-
இந்த நூற்றாண்டின் அற்புதமான படைப்பாக பிளாஸ்டிக் பார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பயன்பாட்டு பொருள் ஆகி விட்டது. முந்தைய நூற்றாண்டில் இயற்கையை சார்ந்து வாழ்ந்து வந்தார்கள். தற்போது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களிலும் பிளாஸ்டிக் இருக்கிறது. பிளாஸ்டிக் கேரி பைகளால் கடுமையாக மாசு பாதிப்பு ஏற்படுகிறது. நாற்காலி 5 ஆண்டு பயன்படுத்திய பிறகு மறுசுழற்சிக்கு சென்று விடுகிறது. ஆனால் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் தாள் காற்றில் பறந்து செல்லும். இது பூமி, நீர் நிலைகள், வாய்க்கால், குளம், கடலில் சேர்ந்து பெரும் பிரச்சினையை, பல்லுயிர் பெருக்கத்தை பாதிக்கிறது. வாழ்நாளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும். இதற்கு அரசு மேலும் கடுமையான நடவடிக்கைகளை கையாள வேண்டும்.
மறுசுழற்சிக்கு முன்னுரிமை
பிளாஸ்டிக் சில்லறை விற்பனையாளர் பாலாஜி:-
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்துள்ளது. அரசு வழிகாட்டுதல்படி மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. 'பயோ டிகிரேடபிள் பேக்' எனப்படும் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் சர்வதேச நிறுவனங்களின் தயாரிப்பான ஷாம்பு, பிஸ்கட் பாக்கெட்டுகள், தின்பண்டங்களின் பைகள் ஆகியவை எளிதில் மக்கிப்போகாதவை ஆகும். அவை சந்தையில் எளிதாக உலா வருகிறது. எனவே, பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவதோடு, அவற்றை மறுசுழற்சி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
துணிப்பைகள்
நெல்லை டவுன் சுகாதார அலுவலர் (பொறுப்பு) இளங்கோ:-
பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பைகள் விற்பனை, பயன்பாட்டை தடுக்க அவற்றை பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இருந்த போதிலும் வணிகர்களும், பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கடைகளுக்கு செல்லும்போது துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும்.
அபராதம்
தென்காசி நகராட்சி ஆணையர் பாரிசான்:-
தென்காசி நகராட்சியில் அரசின் விதிகளின்படி பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் சேகரித்து இருப்பு வைத்து தரம் பிரித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் திட்டம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தூய்மை பணியாளர்கள் மூலம் பழைய பொருட்கள் எடுக்கும் கடைகளில் கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தை தூய்மை பணியாளர்களுக்கே வழங்கப்படுகிறது.
மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து `பேக்கிங்' செய்து சிமெண்டு ஆலைகளுக்கு எரிபொருளுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடைகள், குடோன்கள் போன்றவற்றிலிருந்து இதுவரை 3,836 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றை வைத்திருந்த கடை மற்றும் குடோன்களின் உரிமையாளர்களிடமிருந்து மொத்தம் ரூ.3 லட்சத்து 21 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
சிறு வியாபாரிகளிடம் பறிமுதல்
தென்காசியை சேர்ந்த அப்துல் மஜீத் ஷா:-
பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய சோதனை நடத்தப்படுகிறது. சிறிய கடைகள், சிறிய ஓட்டல்கள் போன்ற சிறு வியாபாரிகளிடம் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. இது எங்கு உற்பத்தி ஆகிறதோ அங்கு ஏன் நிறுத்த மறுக்கிறார்கள்? அங்கு நிறுத்தினாலே போதும். இது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும். தமிழக அரசு மக்களின் நலன் கருதி இதில் முழு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.