ஆதார் எண் இணைப்பு அவசியமா? அலைக்கழிப்பா?-பொதுமக்கள் கருத்து
அனைத்து நலத்திட்டங்கள், மானியங்கள் பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது அவசியமா? அலைக்கழிப்பா? என்பது குறித்து ெபாதுமக்கள் கருத்து ெதரிவித்துள்ளனா்.
ஒருவர் பிறப்பு முதல் இறப்பு வரை, படிப்பு முதல் வேலை வரை, எங்கும், எதற்கும், எதிலும் ஆதார்? என்ற நிலை இன்றைக்கு உருவாகிக் கொண்டு வருகிறது.
ஆதார் அறிமுகம்
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற படிப்பினையை மத்திய அரசுக்கு உணர்த்தியது. அப்போது தான் நாட்டு மக்கள் அனைவருக்கும் கை விரல் ரேகை, கண் கருவிழி ஆகிய உடல்கூறு பதிவுகளுடன் தனி அடையாள எண்ணை வழங்க வேண்டும் என்ற யோசனை அரசாங்கத்துக்கு உதித்தது.
அதற்காக இந்திய தனிநபர் அடையாள ஆணையம் என்ற அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு 12 இலக்க எண்ணுடன் ஆதார் அட்டை வழங்கும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கியது. 140 கோடிக்கு மேலான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் இதுவரையில் 131 கோடி பேருக்கு ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டுவிட்டது.
எதிர்ப்புக் கிளம்பியது
தனி நபர் அடையாள எண்ணாக ஆதார் அறிமுகம் ஆனாலும் நாளடைவில் மத்திய அரசின் மானியங்கள், சலுகைகளைப் பெறுவதற்கும் அது அவசியம் என்று ஆணைகள் வந்தன. ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. முக்கிய விவாத பொருளாகவும் மாறியது.
நீதிமன்றங்கள் வரை வழக்குகளும் சென்றன. இறுதியில் ஆதாரே வென்றது. அதையடுத்து வருமான வரி செலுத்துவதற்கான பான் எண் (நிரந்தர கணக்கு எண்), வங்கி கணக்கு எண், ரேஷன் அட்டை, வருங்கால வைப்பு நிதி எண் போன்ற அனைத்திலும் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டது.
ஆயுதமானது
வங்கிகள் மூலம் சமையல் கியாஸ் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் ஆனவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டன. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.3 ஆயிரத்து 445 கோடி மானியத் தொகை மிச்சம் ஆனது.
ரெயிலில் 'டிக்கெட்' முன்பதிவு செய்ய தனி நபருக்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கிலும் ஆதார் இணைப்பு கட்டாயம் ஆனவுடன் போலி கணக்குகள் ஒழிக்கப்பட்டன. இது போன்று மத்திய அரசின் மானியங்கள், திட்டங்களில் முறைகேடுகளை ஒழித்துக்கட்டும் ஆயுதமாக ஆதார் மாறியது.
தமிழ்நாட்டில் கட்டாயம்
தமிழகத்தைப் பொறுத்த அளவில் முதலில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது. பின்னர், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் 1 கோடி ஆதார் எண்கள் இதுவரை இணைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து இணைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள், சலுகைகள், மானியங்கள் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், திட்ட பயனாளிகளின் ஆதார் அங்கீகாரத்தை பெறுவதற்கான கை விரல் ரேகை பதிவு சரியாக செயல்படாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முகப்பதிவு போன்ற அடையாள பதிவை மேற்கொள்ளலாம் அல்லது ஆதார் ஓ.டி.பி.முறையிலும் முயற்சி மேற்கொள்ளலாம்' என்ற அறிவிப்பும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற ஜனவரி 14-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
இதுபோன்ற ஆதார் இணைப்பு கட்டாய முறை மக்களுக்கு அவசியமா? அல்லது அலைக்கழிப்பா? என்பது பற்றிய சேலம் மாவட்ட மக்கள் பார்வை வருமாறு:-
மோசடிக்கு வாய்ப்பு
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த இல்லத்தரசி ஆர்.சுகன்யா:-
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு போய்ச் சேருகிறதா? என்பதை கவனிக்க வேண்டியது மிக, மிக முக்கியம் ஆகும். இதற்காக ஆதார் எண் இணைப்பு அவசியம் என்று தமிழக அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன். அதேசமயம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைன் மூலம் பணம் அபேஸ் செய்யப்படும் சம்பவங்களை தொடர்கதையாகி வருகின்றன. எனவே, ஆதார் இணைப்பு உத்தரவை சமூக வலைத்தள குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும். ஏனென்றால் வங்கி கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்களோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. அச்சத்தை போக்க வேண்டியது அரசின் கடமை.
வரவேற்கக்கூடியது
சேலம் மனித உரிமை கோர்ட்டு அரசு சிறப்பு வக்கீல் பழனிமுருகன்:-
மக்கள் நலத்திட்டங்கள், மானியங்களில் ஆதார் எண் இணைக்கப்பட்டால் தகுதியான பயனாளிகள் யார்? என்பதை எளிதில் கண்டறிந்து விடமுடியும். இதன் மூலம் தகுதி இல்லாதவர்கள் பயன் பெற முடியாது என்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு தடுக்கப்படும். மக்கள் வரிப் பணம் விரயமாவது தடுக்கப்படும். எனவே, தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பு வரவேற்கக்கூடியது. எத்தனை மக்கள் இருக்கிறார்கள் என்பது அரசுக்கு புள்ளி விவரங்கள் தெரியவரும். ஏற்கனவே வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு, மின் இணைப்புடன் பதிவு, வாக்காளர் அடையாள எண்ணுடன் சேர்ப்பு போன்றவை தொடர்ந்து தற்போது அரசின் திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்துள்ளது. எனவே, அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
பயனாளிகளை குறைக்க....
தேவூர் குள்ளம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்:-
அரசின் நலத்திட்டம் பெற ஆதார் இணைப்பு அவசியம் என்பது பயனாளிகளை குறைப்பதற்கான நடவடிக்கை என்று தான் கருத வேண்டும். உதாரணத்திற்கு அமைப்பு சாரா திட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம் வாங்குபவர்கள், வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை வாங்க முடியாது என்று எனப்து நிருபனமாகிறது. மேலும், தகுதி இல்லாத சிலர் அரசு திட்டங்களை அதிகளவில் பெற்று வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என்றால் ஆதார் இணைப்பு அவசியமாகிறது. ஏழை, எளிய மக்கள் போன்று தங்களை அடையாளம் காட்டி கொள்வதற்காக ஆண்டு வருமானத்தை குறைத்து திட்டங்களில் சேர்ந்து சலுகைகள், மானியங்களை பெற்று ஆதாயம் அடைந்து வருபவர்களுக்கு இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.
பாமர மக்கள் பரிதவிக்கும் நிலை
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பரிமளா:-
மத்திய, மாநில அரசுகள் எதற்கு எடுத்தாலும் ஆதார் இணைப்பு அவசியம் என்று கூறி வருகிறது. இதனால் மக்களை அலைக்கழிக்கும் செயலாக கருதுகிறேன். ரேஷன்கார்டு உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய ஆவணங்களை வைத்துதான் திட்டங்களில் மக்கள் இணைகிறார்கள். தற்போது ஆதார் அட்டை அவசியம் என்றால் மற்ற அரசு ஆவணங்களுக்கு என்ன மதிப்பு? நலத்திட்ட உதவிகள், சலுகைகள், மானியங்களை பெற ஆதார் எண் அவசியம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது பாமர மக்கள் பரிதவிக்கும் நிலைதான் ஏற்படுகிறது. இதனால் இந்த விஷயத்தில் மக்களுக்கு சாதகமும், பாதகமும் இருக்கிறது. அரசாங்கமே சரியான வழிமுறைகளை அறிவிக்க வேண்டும். தனியார் மூலம் ஆதார் இணைத்தால் அது இணைக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. எனவே, ஆதார் விஷயத்தில் இன்னும் சிலருக்கு புரியாத புதிராகத்தான் இருக்கிறது.
ஆதார் எண் இணைப்பு அவசியமா? அலைக்கழிப்பா?-பொதுமக்கள் கருத்து
ஓமலூர் கோட்டமேட்டுப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணன்:-
அரசு நலத்திட்ட உதவிகள், சலுகைகள், மானியங்களை பொதுமக்கள் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். ஏனென்றால் அரசு ஒதுக்கீடு செய்யும் மானியங்கள் உண்மையான விவசாயிகளுக்கு சென்று அடைய வழிவகை செய்ய ஏதுவாக அமைகிறது. அதேபோல், மானிய விலையில் கிடைக்கும் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கப்படும். ஆதார் எண்ணில் தனிநபரின் அனைத்து விவரங்களும் அடங்கி உள்ளதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்களோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, அரசின் திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அரசின் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு சிரமம் இன்றி அதுகிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், செல்போன் மாற்றம் போன்றவைகளுக்காக மக்கள் அலைகழிக்கப்படும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
அதேப் போன்று வாக்காளர் அடையாள அட்டை எண், நலத்திட்டங்களுக்கு என்று தனித்தனியாக ஆதார் இணைப்பை செயல்படுத்தாமல் அதனை ஒரே குடையின் கீழ் செயல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.