பாஜக எதிர்க்கட்சியா? யார் என்பது மக்களுக்கு தெரியும் - ஜெயக்குமார் ஆவேசம்
உண்மையான எதிர்கட்சி யார் என்பது மக்களுக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
டிடிவி தினகரனின் தலைமையிலான அமமுகவுடன், அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. வேண்டுமானால் பன்னீர்செல்வம், சசிகலாவுடன் அமமுக கூட்டணி வைத்து கொள்ளட்டும்.
ஓபிஎஸ் கட்சியிலேயே இல்லை.அவருக்கு சட்டப்பேரவையில் இடம் கொடுக்க கூடாது என ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் கொடுத்திருக்கிறோம். பேரவையில் ஓபிஎஸ்-க்கு இடம் ஒதுக்கினால் சபாநாயகரின் மரபை மீறியதாக அர்த்தம். திமுக மக்களிடம் செல்வாக்கை இழந்தது விட்டது. மழைநீர் வடிகால் பணிகளை அவசர அவசரமாக செய்கிறது. ஆனால் தரமான வகையில் அந்த பணிகள் நடைபெற வேண்டும் மழைநீர் வடிகால் விவகாரம் திமுக அரசுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும்.
பாஜக தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், அண்ணாமலை ஆயிரம் சொல்லுவாரு; தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றார்.